The politics of Jayalalithaas death is a vile act

ஜெயலலிதா மரணத்தை அரசியலாக்குவது மிகவும் கீழ்த்தரமான செயல் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். ஜெயலலிதா சிகிச்சை வீடியோ ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

நாளை காலை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஆரம்பமாக உள்ளது. இதில் அதிமுக சார்பில் மதுசூதனனும் திமுக தரப்பில் மருதுகணேஷும் சசிகலா அணி சார்பில் டிடிவி தினகரனும் போட்டியிடுகின்றனர். 

மேலும் மற்ற கட்சிகள், சுயேட்ச்சைக்கள் என 59 பேர் போட்டியிடுகின்றனர். முன்னதாக ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி பன்னீர் செல்வம் தனி அணியாக பிரிந்தார். அப்போது தகுந்த வீடியோ இருப்பதாக சசிகலா தரப்பு கூறியது. ஆனால் அதை வெளியிட மறுப்பு தெரிவித்து வந்தது. 

இதை தொடர்ந்து தற்போது ஒபிஎஸ் இபிஎஸ் இணைந்து டிடிவியை புறந்தள்ளி ஆர்.கே.நகர் தேர்தலை சந்தித்து வருகின்றனர். அவர்களுக்கு எதிராக டிடிவியும் களமிறங்கியுள்ளார். 

நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த நிலையில் வெளியிடமுடியாது என சசிகலா தரப்பால் மறுக்கப்பட்டு வந்த வீடியோவை திடீரென இன்று டிடிவி ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டார். 

இது பல்வேறு இடங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அமைச்சர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

இதுகுறித்து பேசிய திமுக செயல்தலைவர் ஸ்டாலின், ஜெயலலிதா மரணத்தை அரசியலாக்குவது மிகவும் கீழ்த்தரமான செயல் என்றும், ஜெயலலிதா சிகிச்சை வீடியோ ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனவும் தெரிவித்தார். 

ஜெயலலிதாவின் மரணத்தையே கீழ்த்தரமாக அரசியலுக்கு பயன்படுத்துவார்கள் என்று நான் நினைக்கவில்லை எனவும் வீடியோ உண்மையோ, பொய்யோ அதில் தான் தலையிட விரும்பவில்லை, இது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் எனவும் குறிப்பிட்டார்.