திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற தேர்தல் பிரசாரப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இன்று விழுப்புரம் மாவட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞரணி கூட்டத்தில் பேசினார். “கடந்த நவம்பர் 20-ம் தேதி இந்தப் பிரச்சாரத்தை தொடங்கினேன். இந்தப் பயணம் தொடங்கியபோது போலீஸார் பல்வேறு நிபந்தனைகளைக் கூறி என்னைக் கைது செய்தனர். இரவில்தான் என்னை விடுவித்தார்கள். இரவிலும் என்னுடைய பிரசாரத்தை செய்தேன். திமுகவில் பல்வேறு அணிகள் உள்ளன. இருந்தாலும் இளைஞரணியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.
தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ளன. எனவே தேர்தல்ல் இளைஞர்களின் உழைப்பு அதிகமாக இருக்க வேண்டும். தமிழக மக்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். ஆட்சி மாற்றம் வரப்போவது உறுதியாகிவிட்டது. நீங்களும் அதனை உறுதியோடு ஏற்றுச் செயல்பட வேண்டும். இந்தியாவின் மிகப்பெரிய மூன்றாவது கட்சியாக திமுகவை மாற்றியதற்கு காரணமே நீங்கள்தான். வரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற உறுதியேற்க வேண்டும்” என உதயநிதி ஸ்டாலின் பேசினார்.


விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “நான் பிரச்சாரம் செய்யும்போது வன்முறையைத் தூண்டுவதாக என் மீது வழக்குத் தொடர்ந்தார்கள். தற்போது தகாத முறையில் பேசுவதாக வழக்குத் தொடர்ந்துள்ளனர். நான் தகாத முறையில் பேசுகிறேனா? முதல்வர் பழனிசாமி படிப்படியாக வளர்ந்து வந்ததாகச் சொல்கிறார். சசிகலா 27-ம் தேதி வெளியே வருகிறார். உடனே அவர் காலில் முதல்வர் விழுந்துவிடுவார். இந்தியாவில் முதன்மை மாநிலமாம் தமிழகம். ஊழலில்தான் முதல் மாநிலம். ரூ.6,000 கோடியை முதல்வர் உறவினர் ஊழல் செய்துள்ளார் என்றால், அவர் எனக்கு சம்பந்திதான், உறவினர் இல்லை என்கிறார்.” என உதயநிதி ஸ்டாலின் பேசினார்.