தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் நல்லாட்சியை கலைத்துவிட்டு சில ஆட்சியை பிடிக்க முயற்சி செய்து வருவதாகவும், தமிழகத்தில் எந்த சவால் வந்தாலும் சந்திப்போம் எனவும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக சசிகலா அணி ஒபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்தது. சொத்துகுவிப்பு வழக்கில் சிறைக்கு செல்ல வேண்டி இருந்ததால் அவரது அணியில் இருந்த எடப்பாடியை முதலமைச்சராக சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்தனர். 

இதையடுத்து அந்த பதவியை டிடிவி பிடுங்க நினைத்ததால் கட்சியில் பல்வேறு குழப்பங்களும் கெட்டப்பெயர்களும் உருவாகின. இதனால் ஆத்திரமடைந்த அமைச்சரவை எடப்பாடிக்கு சாதகமாக பேச ஆரம்பித்தனர். 

இதனிடையே எடப்பாடி தலைமையிலான ஆட்சியை பற்றி பன்னீர் செல்வம் கழுவி கழுவி ஊற்றினார். இதையடுத்து எடப்பாடி டிடிவியை ஒதுக்கி வைக்கவும் பன்னீர்செல்வம் துணை முதல்வர் பதவியை வாங்கிகொண்டு எடப்பாடியுடன் ஒட்டிக்கொண்டார். 

இதையடுத்து நடக்கும் கூட்டங்களில் எடப்பாடியின் அரசை புகழ்ந்து தள்ளி வருகிறார் பன்னீர்செல்வம். 
இந்நிலையில், இன்று வேலூரில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. இதில் பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார். 

அப்போது, தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் நல்லாட்சியை கலைத்துவிட்டு சில ஆட்சியை பிடிக்க முயற்சி செய்து வருவதாகவும், தமிழகத்தில் எந்த சவால் வந்தாலும் சந்திப்போம் எனவும் தெரிவித்தார். 

எங்களுக்கு தர்மம், சத்தியம், நேர்மை துணை நிற்கிறது என்றும், அதிமுக அரசை யாராலும் அசைத்து பார்க்க முடியாது எனவும் தெரிவித்தார்.