தேர்தல் களத்தில் விளயாடி, வேட்டையாட தொடங்கி விட்டது அதிமுக. அதன் முதற்கட்டமாக துணை முதல்வர் ஓ.பி.எஸின் குரல் ரத்தத்தின் ரத்தங்களின் செவிகளில் சென்றடைந்து உற்சாகமூட்டுவதாக மகிழ்ச்சியடைந்துள்ளனர் அதிமுகவினர். 

’’தமிழக மக்களின் உயிரிலும், உணர்விலும் இரண்டற கலந்து மக்களால் நான், மக்களுக்காகவே நான் என தனது இறுதி மூச்சு உள்ளவரை மக்கள் நலனுக்காகவே தன்னை அர்ப்பணித்த மக்கள் தலைவி இதய தெய்வம் மாண்புமிக அம்மாவின் பொற்பாதங்களை முதற்கண் வணங்குகிறேன். நரகாசுரனை பகவான் கிருஷ்ணர் வதம் செய்ததை போல கொரோனா என்ற கொடிய அரக்கனை வெல்ல இந்த தீப ஒளி திருநாளில் அனைவரும் சபதம் ஏற்போம். எத்தனையோ இன்னல்களையும், இடையூறுகளையும் கடந்து வந்த நாம் இதையும் கடந்து வருவோம். 

 

சமூக இடைவெளியை கையாண்டு, தீபாவளி திருநாளை கொண்டாடுவோம். வருங்காலங்களில் அனைவரின் வாழ்க்கையும் வண்ணமயமாகட்டும், சர்க்கரை இனிப்பை போல வாழ்க்கை செழித்தோங்கட்டும், தீப ஒளி போல அனைவரின் வாழ்விலும் சுடர் விடட்டும். இந்த தீப ஒளி திருநாள் ஒவ்வொருவர் இல்லங்களிலும் துன்பத்தை நீக்கட்டும். இன்பங்களும், இனிய நிகழ்வுகளும் களைகட்டும். எவ்வித பாகுபாடும் இன்றி, ஏற்றதாழ்வும் இன்றி தமிழக மக்கள் அனைவரும் வலமும், நலமும் பெற்று இன்புற்று வாழ்ந்திட இதய பூர்வமாக வாழ்த்துகிறேன்” என என தீபாவளிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வீடியோவை வெளியிட்டு இருந்தார் ஓ.பி.எஸ். 

இந்த வீடியோவின் ஆடியோவை மட்டும் வெட்டி எடுத்து தொலைபேசி மூலமாக தேனி, போடி, பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வரும் மக்களுக்கு சென்றடையும் வகையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

ஓ.பி.எஸின் இந்த ஆடியோவை கேட்டு இன்ப அதிர்ச்சி கொண்ட மக்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்த ஒலிபரப்பை வரும் தேர்தலுக்கான முதற்கட்ட பிரச்சமாக நினைத்து அதிமுக உடன்பிறப்புகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.