OPS vs EPS : ஒற்றை தலைமை தீர்மானத்திற்கு தடை..! உற்சாகத்தில் பொதுக்குழுவுக்கு செல்கிறார் ஓபிஎஸ்
அதிமுக பொதுக்குழுவில் ஒற்றை தலைமை தீர்மானம் தொடர்பாக முடிவெடுக்க கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், பொதுக்குழு கூட்டத்திற்கு ஓ.பன்னீர் செல்வம் செல்லவுள்ளார்
அதிகாலையில் கிடைத்த தீர்ப்பு
அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுமா? நடைபெறாதா? என சினிமா படத்தில் வருவது போல் ஒவ்வொரு காட்சியும் பரபரப்பை ஏற்படுத்தியது. கிளைமாக்ஸ் காட்சி போல் சீட்டின் நுனிக்கே வர வைத்து விட்டது. ஆனால் படத்தில் ஒருவர் வெற்றி பெறுவார் ஒருவர் தோல்வி அடைவார். ஆனால் பொதுக்குழுவில் இரண்டு பேருக்கும் மன நிறைவான தீர்ப்பு வந்துள்ளது. பொதுக்குழு கூட்டம் நடத்தலாம், 23 தீர்மானங்கள் தொடர்பாக ஆலோசிக்கலாம், ஆனால் ஒற்றை தலைமை தொடர்பாக இறுதி முடிவு எடுக்க கூடாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நேற்று மதியம் நீதிமன்றத்தில் தொடங்கிய சட்ட போராட்டம் இன்று காலை 4.30 மணிக்கு நீதிபதி வீட்டில் முடிவுற்றுள்ளது. இந்த தீர்ப்பால் ஓபிஎஸ் அணி மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஓபிஎஸ் வீட்டு முன் கூடியிருந்த தொண்டர்கள் உற்சாகமாக முழக்கமிட்டு வருகின்றனர்.
பொதுக்குழுவிற்கு செல்லும் ஓபிஎஸ்
பொதுக்குழு கூட்டத்திற்கு ஓபிஎஸ் செல்வாரா மாட்டாரா என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்திருந்த நிலையில், நிச்சயமாக பொதுக்குழு கூட்டத்திற்கு ஓ.பன்னீர் செல்வம் செல்வார், கூட்டத்தில் தனது கருத்துகளை கூறுவார் என தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஓபிஎஸ் ஆதரவாளரும், துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்தியலிங்கம், நீதிமன்ற உத்தரவை மதிக்கிறோம், நீதிமன்ற உத்தவு படி செயல்படுவோம், பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் நிச்சயம் கலந்து கொள்வார் என தெரிவித்தார். இதே போல நாடாளுமன்ற உறுப்பினரும், ஓபிஎஸ் மகனுமான ரவிந்திர நாத் கூறுகையில், மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு கிடைத்த வெற்றியென தெரிவித்துள்ளார். பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொள்வார் எனவும் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்