கனடா மேற்கொண்ட ஆராய்ச்சியின்படி தும்மல்-இருமலின் போது வெளியாகும் சளித்திவலைகள், ஏற்கனவே மதிப்பிடப்பட்டதை விட அதிகமாக, 3 வினாடிகளில் 6அடிகளை தாண்டி பயணிக்கும் என பாம நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’சென்னை, கோயம்பேடு சந்தையில் நாளை முதல் காலை 7.30 மணிக்கு பிறகு இரு சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படாது என்று மாநகராட்சி அறிவித்திருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை. சந்தையில் அனைத்து நிலைகளிலும் சமூக இடைவெளி கடைபிடிக்கப் படுவதையும் உறுதி செய்ய வேண்டும்.

கனடா மேற்கொண்ட ஆராய்ச்சியின்படி தும்மல்-இருமலின் போது வெளியாகும் சளித்திவலைகள், ஏற்கனவே மதிப்பிடப்பட்டதை விட அதிகமாக, 3 வினாடிகளில் 6அடிகளை தாண்டி பயணிக்குமாம். இது சமூக இடைவெளியை அர்த்தமில்லாததாக்கி விடும். எனவே, ஊரடங்கை முழுமையாக கடைபிடிப்பதே கொரோனாவிலிருந்து தப்பிக்க ஒரே வழி. காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்கும் போதிலும், அதை மதிக்காமல் ஊர் சுற்றித் திரியும் சாகச இளைஞர்களுக்கு கனடா நாட்டு ஆய்வு முடிவுகள் புதிய எச்சரிக்கை ஆகும். இதை அறிந்து அவர்கள் திருந்தினால் நல்லது. இல்லாவிட்டால் இதை அவர்களுக்கு எப்படி புரிய வைப்பது?

மதுரை சித்திரைத் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது, தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது, ஆனாலும் சாகச இளைஞர்கள் சாலைகளில் சுற்றுவது மட்டும்  குறையவில்லை. குறைந்தபட்ச பொறுப்புடன் செயல்படுவோம்; தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்போம். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் கடந்த ஒரு வாரத்தில் 40 சதவிகிதம் குறைந்துள்ளது. இது நோய்த்தடுப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமாகும். அதிவிரைவு ரத்தமாதிரி சோதனைகளை விரைவுபடுத்தி, தேவையானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதன் மூலம் கொரோனாவை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்’’என அவர் தெரிவித்துள்ளார்.