தொற்று நோய் பரவியபோது யார் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும்.? நாம் சிறப்பாக செய்திருக்கலாம், ஆனால் உலகில் நூற்றுக்கும் குறைவான தொற்றுகள் இருந்தபோதே ஒரு மரணம் இல்லாத போதே கொரோனா குறித்து உலக சுகாதார அவசரநிலையை WHO அறிவித்தது.
கொரோனா வைரஸ் முடிவுக்கு வந்துவிட்டது என கூறுவது தவறானது என்றும், புதிய மாறுபாடு வைரஸ் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்றும் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா சாமிநாதன் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக குறைந்துள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. முதல் அலை இரண்டாவது அலையை காட்டிலும் ஒமைக்ரான் 3வது அலையின் தாக்குதல் மிதமானதாகவே இருந்தது. இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வைரஸ் தொற்று வேகமாக வீழ்ச்சியை சந்தித்து வருகிறது, கொரோனா வைரஸ் 3 அலைகள் முடிந்துவிட்டது, கொரோனா மொத்தமாக முடிவுக்கு வந்துவிட்டது என பலரும் கூறி வருகின்றனர். ஆனால் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா சாமிநாதன், கொரோனா தொற்று முடிவுக்கு வரும் என வெளியாகி வரும் வதந்திகளை நம்புவது முட்டாள்தனம் என கூறியுள்ளார். இது குறித்து அவர் ப்ளூம்பெர்க் ஆங்கில நாளேட்டுக்கு வழங்கியுள்ள பேட்டியின் விவரம் பின்வருமாறு:-
1. தொற்று நோய் எப்போது முடிவுக்கு வரும்...?
இதற்கு தற்போது யாரிடமும் பதில் இல்லை, தொற்றுநோய் முடிந்துவிட்டது என்ற வதந்திகளை நம்பி எச்சரிக்கையாக இருப்பதை குறைத்துக் கொள்வது முட்டாள்தனமானதாக இருக்கும், புதிய வகை கொரோனா மாறுபாடு எப்போது வேண்டுமானாலும் வரலாம், அது எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் கண்டுபிடிக்கப்படலாம், மீண்டும் அதே நிலைமைக்கு வேகமாக தொற்றபரவலாம், முன்பை விட இன்னும் கவனமாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. 2022 ஆம் ஆண்டின் இறுதியில் நாம் ஒரு நல்ல நிலைக்கு வருவோம் என்று நம்புகிறேன்.

2. தொற்று நோய்களில் அறிவியல் அரசியல் உங்களை ஆச்சரியப்படுத்தியதா.?
ஆம் இது என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. தொற்று நோய்களின் போது விஞ்ஞானிகள் மற்றும் அறிவியல் மீதான தாக்குதல்களை கண்டு நான் ஆழ்ந்த ஏமாற்றம் அடைந்தேன். அறிவியல் மற்றும் சுகாதாரம் ஆகிய விஷயங்களில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், ஒவ்வொரு தகவலையும் காரணத்துடன் கேள்வி கேட்கும் வகையில் இளைஞர்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.
3. பணக்கார நாட்டு மக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தடுப்பூசிகளை செலுத்திக் கொள்கின்றனர், ஆனால் ஏழை நாடுகள் இன்னும் அதற்காக போராடுகின்றன, இது ஒரு புதிய மாறுபாடுள்ள வைரசுக்கு வழிவகுக்குமா.?
தற்போது அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகளில் தடுப்பூசி பற்றாக்குறை என்பது இல்லை ஆனால் ஆப்பிரிக்காவில் பல ஏழை நாடுகளில் தடுப்பூசி பற்றாக்குறை உள்ளது. ஆப்பிரிக்காவில் 85 சதவீத மக்கள் இன்னும் தடுப்பூசியின் முதல் டோஸ்கூட பெறவில்லை, இதுபோன்ற சூழ்நிலையில் இந்த வைரஸ் மக்கள் மத்தியில் பரவி வருவதால் கொரோனாவின் புதிய வகைகள் உருவாகுவதற்கு அனைத்து வாய்ப்புகளும் உள்ளன.
4. வூஹான் ஆய்வகத்தில் இருந்து வைரஸ் கசிந்தது என்ற கூற்றை நீங்கள் நிராகரித்து விட்டீர்களா.?
சீனாவுக்கு சென்றுவந்த WHO குழு இந்த வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கண்டறிந்தது. இந்த வைரஸ் காட்டி விலங்கு அல்லது வீட்டு விலங்கு அல்லது பறவை அல்லது வௌவ்வால் என எதிலிருந்து வந்தது என்பதை இப்போதைக்கு சொல்வது கடினம். இருப்பினும் அது ஆய்வகத்தில் இருந்து கசியவில்லை என்று கூறுவதாக எடுத்துக் கொள்ளவும் முடியாது, இது குறித்து நாம் இன்னும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
5. கொரோனா வைரஸ் உருவானது பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்.
பெரும்பாலான வைரஸ்கள் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுகின்றன, எந்த விலங்குகளிலிருந்து எந்த வைரஸ் வந்தது என்பதை கண்டுபிடிக்க பல ஆண்டுகள் ஆகும். எடுத்துக்காட்டாக சார்ஸ், மெர்ஸ் வைரஸ் சீவெட் பூனைகள் மற்றும் ஒட்டகங்களில் இருந்து மனிதர்களுக்கு வந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை விஞ்ஞானிகள் புரிந்துகொள்ள பல ஆண்டுகள் ஆனது. அதேசமயம் சிம்பன்சிகளிடமிருந்து எச்ஐவி வைரஸ் பரவியதை கண்டுபிடிக்க நீண்டகாலம் ஆனது.

6. தொற்று நோய் பரவியபோது யார் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும்.?
நாம் சிறப்பாக செய்திருக்கலாம், ஆனால் உலகில் நூற்றுக்கும் குறைவான தொற்றுகள் இருந்தபோதே ஒரு மரணம் இல்லாத போதே கொரோனா குறித்து உலக சுகாதார அவசரநிலையை WHO அறிவித்தது. அந்த நேரத்தில் உலகம் எச்சரிக்கைகளை தீவிரமாக எடுத்துக் கொண்டிருந்தால், இன்று நாம் தொற்றுநோயுடன் இந்த அளவிற்கு போராட வேண்டி இருந்திருக்காது. எச்சரிக்கை விடுக்கப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு கொரோனா ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் அழிவை ஏற்படுத்த தொடங்கியது.
7.WHO பலப்படுத்தப்பட வேண்டுமா.?
எதிர்காலத்தில் பெரும் ஆபத்தான தொற்று நோய்களைத் தவிர்க்க நாம் முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும். WHO வின் 194 உறுப்பு நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும். வைரஸ் பரவுவதை தடுக்க சில விதிகளை உருவாக்க வேண்டும். அதை அனைவரும் பின்பற்ற வேண்டும் இது நம் அனைவருக்கும் நன்மை பயக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
