இனியும் அடக்கி வாசித்து அரசியல் செய்தல் ஆகாது! தன் பின்னால் கைகட்டி நடை போட பெரும் கூட்டம் தயாராகி நிற்கிறது, அடுத்தபடியாய் தனிக்கட்சியை துவக்கிவிடலாம்! எனும் முடிவுக்கு வந்துவிட்டார் தினகரன் என்கிறார்கள்.

ஆர்.கே.நகர் தேர்தல் வெற்றிக்கு பிறகு தனது செயல்பாட்டில் ஒரு தேக்க நிலை இருப்பதாக உணர்ந்தார் தினகரன். உடனே புரட்சிப் பயணத்தை டெல்டாவில் துவக்கினார். ’இதெல்லாம் பி.ஜே.பி.யோட பாடாவதி டெக்னிக். உருப்பறதுக்கு வழியே இல்லை.’ என்று தினாவை பார்த்து நக்கலடித்தனர் ஆளும் அ.தி.மு.க. புள்ளிகள்.

ஆனால் அவரது பயணத்துக்கு கூடிய அ.தி.மு.க. தொண்டர்களின் கூட்டமும், மக்களின் ஆதரவும் தினகரனையே பிரமிக்க வைத்தன. ’இது தானா சேர்ந்த கூட்டம்’ என்று தினாவை கொண்டாடின மீடியாக்கள்.

இந்த நிலையில்தான் தினகரனின் ஆதரவு முக்கியஸ்தர்களான தங்கதமிழ்செல்வன், செந்தில்பாலாஜி, பழனியப்பன் போன்றோர் ’தலைவரே! என்ன இல்ல உங்க கையில?  தொண்டர் பலம் இருக்குறது துல்லியமா தெரிஞ்சுடுச்சு, மக்கள் ஆதரவு அமோகமா இருக்குறதை நீங்களே கண் குளிர பார்த்துட்டீங்க. நீங்க ஒரு கரீஸ்மேடிக் ஃபிகர் அப்படின்னு பத்திரிக்கைகளே தொடர்ந்து எழுதுது. இவ்வளவும் இருந்தும் இப்படியே போயிட்டிருந்தா சரிப்பட்டு வராது. தனிக்கட்சி துவக்கிடலாம்.

நாம தனி அணி மாதிரி இருக்கப்போயிதான் நம்ம பின்னாடி வந்து சேர்றதுக்கு எடப்பாடி- பன்னீர் அணி முக்கியஸ்தர்கள் தயங்குறாங்க. ஒரு கட்சியா உருவெடுத்துட்டோம்னா அவங்க மளமளன்னு வந்து ஜாயிண்ட் ஆகிக்குவாங்க. சீக்கிரமா ஒரு நல்ல முடிவெடுங்க.’ என்று வலியுறுத்தி பேசியிருக்கிறார்கள் தொடர்ந்து.

தினகரன் இது பற்றி அவ்வப்போது சிந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில்தான் கமல்ஹாசன் தனிக்கட்சி துவங்கி சட்டுப்புட்டென களத்துக்கு வந்துவிட்டார். மக்கள் மத்தியில் அவரைப் பற்றிய பெரும் எழுச்சி இல்லையென்றாலும், அவர் குறித்த ஒரு பேச்சு இருக்கிறது. இப்படி பேச்சை வளர விடுவதே தப்பு என்று பதறுகிறது அ.தி.மு.க.வும், தி.மு.கவு. இதையே தினகரன் ஆதரவு அனுபவசாலி அரசியல்வாதிகளும் அவரிடம் சொல்லியிருக்கிறார்கள்.

வெறும் ரசிகர்களையும், ரிட்டர்யர்டு நடிகைகளையும் நம்பி கமலே கட்சி ஆரம்பிக்கும் போது ஆளுங்கட்சியையே அலற வெச்சும், எதிர்கட்சியை டெபாசீட் இழக்க வெச்சும் ஜெயிச்ச சிட்டிங் எம்.எல்.ஏ. நீங்க! கட்சி துவங்க ஏன் தலைவரே சங்கோஜப்படுறீங்க? என்று மீண்டும் அவரது உள் வட்டார நிர்வாகிகள் புலம்பிக் கொட்டியிருக்கின்றனர்.

கமல் கட்சி துவக்கத்துக்குப் பிறகு தனி கட்சி துவக்கம் பற்றி தீவிரமாக சிந்தித்த தினகரன், கிட்டத்தட்ட அந்த முடிவுக்கு வந்துவிட்டார் என்கிறார்கள். தன் கட்சியின் பெயர், கொடி டிஸைன் ஆகியவை எப்படி இருக்க வேண்டும்? என்று கடந்த இரண்டு நாட்களாக முக்கிய வட்டாரத்தில் விவாதித்திருக்கிறார். இந்த தகவல் அப்படியே ஆளுங்கட்சி வட்டாரத்தில் கசிந்த நேரத்தில்தான் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு, தினகரன் அணியிடம் வந்து ஒட்டிவிட்டார்.

பிரபு பொக்கே கொடுத்து தினகரனுக்கு ஆதரவு தெரிவித்தபோது ‘தலைவரே! தனிக்கட்சி துவங்கலாமான்னு நீங்க யோசிச்சதுமே ஒரு எம்.எல்.ஏ. வந்துட்டாரு. கட்சியை துவங்கிட்டீங்கன்னா எத்தனை அமைச்சர்கள் வரப்போறாங்கன்னு தெரியுமா?’ என்று சிலாகித்திருக்கிறார் மாஜி மினிஸ்டர் பழனியப்பன். அதற்கு தினகரன் மர்மமாய் சிரித்திருக்கிறார்.

இந்நிலையில் ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று  ஒரு முக்கிய முடிவை எடுத்துவிட்டார் தினகரன் என்கிறார்கள். அது ‘தனிக்கட்சி துவங்கியே தீருவது.’ என்பதுதானாம்.

அதேநேரத்தில், தான் துவங்க இருக்கும் கட்சி அ.தி.மு.க.வின் ஜெராக்ஸாக இருக்க வேண்டும் என்பதே தினாவின் விருப்பமாம். கட்சியின் பெயர் மட்டுமல்ல, கொடியும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்பதே அவரது விருப்பம்.

ஏனென்றால் நாளைக்கு அ.தி.மு.க. தன்னோடு வந்து ஒட்டிக் கொண்டு, அக்கட்சிக்கு தலைமை ஏற்க வேண்டிய நிலை வந்தால் மக்கள் மத்தியில் தன்னை பற்றிய குழப்பம் ஏதும் வந்துவிட கூடாது! என்னதான் தனிக்கட்சியை தினகரன் ஆரம்பித்து நடத்தினாலும் அதுவும் அ.தி.மு.க.தான்! என்பது போலவே இப்போது மக்களுக்கு தோன்றிட வேண்டும் என்று நினைக்கிறாராம்.

தினாவின் இந்த மூவ்களை ரகசியமாக ஸ்மெல் செய்திருக்கும் எடப்பாடி கோஷ்டி, ‘ஒரு எம்.எல்.ஏ.வையும் இழுத்துட்டாரு. தனிக்கட்சிக்கு ரெடியாகுறார். இன்னும் எத்தனை பேரை இழுக்கப்போறார்னு தெரியலை.’ என்று பிரதமருக்கு நெருக்கமான வட்டாரத்தில் புலம்பிக் கொட்டியிருக்கிறதாம். இந்த புலம்பலின் பின்னணியானது ‘தினகரன் ஓவரா ஆடுறார். ஏதாச்சும் வழக்கு கிழக்குல அவருக்கு செக் வைக்க கூடாதா?’ என்பதுதான்.

ஆனால் தான் தனி கட்சி துவங்கினால் டெல்லி லாபி தன்னை நசுக்க நினைக்கும் என்பதை முன்கூட்டியே கணித்திருக்கும் தினா, அப்படி நடந்தால் அதையும் முதலீடாக்கி தன்னை இதைவிட பெரிதாக அரசியலில் வளர்த்துக் கொள்ளும் டெக்னிக்குகளை இப்போதே டிஸைன் செய்துவிட்டாராம்.

மொத்தத்துல தெறிக்குது தமிழக அரசியல்!