அதிமுக துணை பொதுச்செயலாளராக சசிகலாவால் நியமிக்கப்பட்ட டி.டி.வி.தினகரனுக்கு புதிய அறை வேக வேகமாக தயாராகி வருகிறது.

அதிமுக பொதுச்செயலாளர், முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்கபட்டார். முதல்வராக ஓ.பி.எஸ் பதவி ஏற்றார்.

இதையடுத்து சசிகலா 4 ஆண்டு சிறை செல்வதன் காரணமாக சிறைக்கு செல்வதற்கு முன் எடப்பாடி பழனிச்சாமியை சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்தார்.

ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட டி.டி.தினகரன், டாக்டர் வெங்கடேஷ் இருவரையும் சசிகலா கட்சியில் இணைத்தார். தினகரனை கட்சியில் இணைத்த அன்று துணைப்பொதுச்செயலாளர் பதவியை வழங்கினார்.

சசிகலா சிறைக்கு சென்ற பின் கட்சியின் அறிவிக்கபடாத பொதுச்செயலாளராக தினகரன் செயல்பட்டு வருகிறார். அனைத்து முடிவுகளும் அவரை கேட்டே எடுக்கப்படுகிறது.

இன்னிலையில், ராயபேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தினகரனுக்காக தனி அறை தயாராகி வருகிறது. பொதுச்செயலாளர் சசிகலாவின் அறைக்கு பக்கத்தில் உள்ள அறை அவருக்காக தயார் செய்யப்பட்டு வருகிறது.

இந்த அறைக்கு புதிய மேசை நாற்காலிகள் தயார் செய்யப்பட்டு நேற்று வந்து இறங்கியது. விரைவில் இந்த அறை தயாரான பின்னர், நல்ல ஒரு முகூர்த்த நாளில் டி.டி.வி தினகரன் பொறுப்பேற்பார் என தெரிகிறது.