The new party has been intensifying in the name of AIADMK led by ttv
டி.டி.வி தலைமையில் அதிமுக அம்மா அணி என்ற பெயரில் புதிய கட்சி தொடங்க தீவிரம் காட்டி வருகின்றனர். அதற்கான விண்ணப்பங்கள் டிடிவி தரப்பு கூட்டத்தில் வழங்கப்பட்டு வருகின்றன.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகளுக்கு இடையே சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 40, 000 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட தினகரன் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு சாதித்து காட்டினார்.

பின்னர் புதிய கட்சி தொடங்கலாம் என முடிவெடுத்தார். ஆனால் டிடிவி ஆதரவாளர்கள் அதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. பின்னர் பேரவை தொடங்கலாமா என திட்டம் தீட்டுவதாக கூறப்பட்டது.
இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை டிடிவி தினகரன் தாக்கல் செய்துள்ளார்.

அதில், விரைவில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதாகவும் அதனால் நாங்கள் அதிமுக அம்மா அணி என்ற பெயரில் செயல்பட அனுமதி வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேனியில் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் நடந்த கூட்டத்தில் அதிமுக அம்மா அணிக்காக விண்ணப்பம் விநியோகிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் டி.டி.வி ஆதரவாளர்களை திரட்டி செயல்வீரர்கள் கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தேனியில் நடந்த கூட்டத்தில் டி.டி.வி ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
