தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நீட் விலக்கு மசோதா குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக இதுவரை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் வரவில்லை என்று சுகாதாரத்துறை இணையமைச்சர்  பாரதி பிரவீன் பவார் தெரிவித்துள்ளார். 

சட்டமன்றத்தில் தீர்மானம்:

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நீட் விலக்கு மசோதா குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக இதுவரை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் வரவில்லை என்று சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்துள்ளார்.மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரும் வகையில் கடந்த ஆண்டு செப்டமர் மாதம் சட்டப்பேரவையில் மசோதா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதில், ‘கிராமப் பகுதிகளில் வலுவான பொது சுகாதார நலனை உறுதி செய்யவும், மருத்துவ இளநிலை பட்டப் படிப்புகளில் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வின் தேவையை விட்டுவிடவும், நெறிப்படுத்துதல் முறை மூலம் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் படிப்புகளின் சேர்க்கையை வழங்கவும் சட்டம் ஒன்றை இயற்ற அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவுக்கு செயல்வடிவம் கொடுக்க, சட்ட மசோதா வழி செய்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

நீட் விலக்கு மசோதா:

சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெறுவதற்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்ற நிலையில், அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து நீட் தேர்வு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு விரைவாக அனுப்பிட வலியுறுத்தினார். அதன்பிறகும் மசோதாவை ஆளுநர் அனுப்பாததால் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் தமிழக எம்.பி.க்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் எம்.பி.க்கள் குழு சந்தித்து வலியுறுத்தியது.

இந்நிலையில், 142 நாட்களுக்கு பிறகு நீட் தேர்வு மசோதாவை மறுபரிசீலனை செய்யும்படி கூறி, கடந்த பிப்.1-ம் தேதி பேரவைத் தலைவருக்கு ஆளுநர் திருப்பி அனுப்பினார். இதைத் தொடர்ந்து, கடந்த பிப்.5-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டம் நடந்தது. இதில் அதிமுக, பாஜக பங்கேற்கவில்லை. பிப்.8-ம் தேதி சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தை கூட்டி, மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்புவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

முதலமைச்சர் பேச்சு:

இதனைதொடர்ந்து தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதவை தாக்கல் செய்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வை ரத்து செய்து 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை மருத்துவக் கல்லூரியில் சேர்க்க அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருவதாக தெரிவித்தார். 

இந்நிலையில் இன்று மக்களவையில், தமிழக அரசு நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதா, குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக உள்துறை அமைச்சகத்திற்கு வந்ததா..? என்று எம்.பி ஆ.ராசா கேள்வியெழுப்பி இருந்தார். அதற்கு பதிலளித்த, சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார், இதுவரை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் வரவில்லை தெரிவித்துள்ளார்.