பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு காரணமாக உணவகங்களில் இட்லி, தோசை, பொங்கல், பிரியாணி, டீ, காபி என எல்லாவகையான உணவுப் பொருட்களின் விலைகளையும் உயர்த்த  ஹோட்டல் உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர். 

பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு காரணமாக உணவகங்களில் இட்லி, தோசை, பொங்கல், பிரியாணி, டீ, காபி என எல்லாவகையான உணவுப் பொருட்களின் விலைகளையும் உயர்த்த ஹோட்டல் உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே உணவகங்களில் உணவு பொருட்களின் விலை பல மடங்கு அதிகமாக இருந்து வருகிறது. இதனால் சாமானிய ஏழை எளிய மக்கள் உணவகங்களில் சாப்பிட முடியாத நிலை உள்ளது. அதனால்தான் ஏழை எளிய மக்களுக்காக அம்மா உணவகம் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது அதன் நிலையம் சரிவர இல்லை. இந்நிலையில் வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை சமீபத்தில் 268 ரூபாய் உயர்ந்து 2,406 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.

இதனால் ஓட்டல் நடத்துவோரின் செலவுகளும் அதிகரித்துள்ளது. எனவே அதை வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலிக்க ஹோட்டல் உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர். எனவே விரைவில் உணவு பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாகவும் ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே பெட்ரோல் டீசல் விலை உயர்வால் காய்கறி பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தத்தில் மளிகை பொருட்களின் விலை 2 மடங்கு முதல் 3 மடங்காக அதிகரித்துள்ளது. ஒரு நடுத்தர குடும்பத்திற்கு 2000 ரூபாய்க்கு மளிகை பொருட்கள் வாங்கி வந்த நிலையில் இவ்விலை ஏற்றத்திற்கு பிறகு அது இரட்டிப்பாகி இருக்கிறது. ஒருபுறம் மளிகை பொருட்களின் விலை ஏற்றம், மறுபுறம் காஸ் சிலிண்டர் விலை உயர்வு இதன் காரணமாக உணவுப் பொருட்களின் விலையை உயர்த்த முடிவு செய்திருப்பதாக சென்னை ஓட்டல்கள் சங்கத்தின் தலைவர் ராஜ்குமார் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தெரிவித்திருப்பதாவது:- வணிக கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. தற்போது ஓட்டல் தொழில் நடத்துவது என்பது மிகவும் சிரமமாகி விட்டது. தற்போதைய சூழ்நிலையில் உணவு பொருட்களின் விலை என்பது கட்டுப்படி ஆகவில்லை, எனது உணவுப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் 10 முதல் 20 சதவீதம் வரை விலை உயர்த்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து விவாதிக்க ஓட்டல் உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம் வரும் 6-ஆம் தேதி நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் உணவு பொருட்களின் விலை எவ்வளவு உயர்த்துவது என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.

தற்போது சிங்கிள் டீ விலை 2 ரூபாய், காபி 3 ரூபாய்க்கும் இட்லி, பூரி, பொங்கல் போன்ற இடங்களை 5ரூபாய், தோசை புரோட்டா விலை 10 ரூபாய் சாப்பாடு வகைகள், பிரியாணி விலை கூடுதலாக 20 ரூபாய் வரை உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது வெளியூர்களில் இருந்து வந்து சென்னையில் தங்கி படித்து வேலை செய்து வருபவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறைந்த ஊதியத்தில் வேலை செய்யும் பலரும் உணவகங்களை நம்பியே இருந்து வருகின்றனர். இந்நிலையில் உணவுப்பொருட்களின் விலை உயரக்கூடும் என்ற அறிவிப்பு பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.