மருத்துவ கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கைக்கு வழிவகுக்கும் 7.5% இட ஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கக் கோரி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் இன்று மாலை ஆளுநர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அதற்கான அறிவிப்பை மனிதநேய மக்கள் கட்சி வெளியிட்டுள்ளது. 

அதில், அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கு மருத்துவக் கல்வி சேர்க்கையில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்து தமிழக அரசு நிறைவேற்றியுள்ள சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் காலந்தாழ்த்தி வரும் தமிழக ஆளுநரைக் கண்டித்தும், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அகில இந்திய மருத்துவக் கல்வி சேர்க்கையில் 50 விழுக்காடு இடஓதுக்கீட்டை அளிக்க மறுத்த மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளன. 

இந்நிலையில் இன்று மாலை சென்னை ஆளுநர் மாளிகை முன்பு நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா.எம்.எச். ஜவாஹிருல்லா தலைமை தாங்க உள்ளார். எனவே இதில் ஏராளமான கட்சி தொண்டர்கள் மற்றும் தோழமை கட்சியினர் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.