தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சென்னை இல்லத்தில் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் சந்தித்துள்ளார். அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்று நாளை அறிவிக்கப்பட உள்ள நிலையில், முதல்வரை சந்தித்து அமைச்சர் பேசி உள்ளார். இச்சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று புதன்கிழமை அறிவிக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமைச் செயலகத்தில் தனது அறையில் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு மே-மாதம் நடைபெற உள்ளது, தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இடையே போட்டி நிலவுகிறது. இல்லை யுத்தமே நடக்கிறது. இந்நிலையில் வருகிற 7ஆம் தேதி முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து அறிவிக்கப்படும் என்று செயற்குழு கூட்டத்திற்கு பின்னர் துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி அறிவித்திருந்தார். இந்நிலையில் அதிமுக கட்சியையும் ஆட்சியும் வழிநடத்த  11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அமைக்க வேண்டும் என்று பன்னீர் செல்வம் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. 

இந்த பரபரப்பான சூழ்நிலையில் தனது ஆதரவாளர்களுடன் கடந்த இரண்டு தினங்களாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார். அதேபோல் தனது தொண்டர்கள் நலனை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்படும் என டுவிட்டரில் ஓபிஎஸ் பதிவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் அமைச்சர்கள் ரகசியமாக முதலமைச்சர் மற்றும் துறை அமைச்சர் ஆகியோரை தனித்தனியே சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை சென்னையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் எடப்பாடியை சந்தித்துள்ளார். முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து நாளை அறிவிக்கப்பட உள்ள நிலையில்  அமைச்சர் முதல்வரை சந்தித்திருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.