ஆடிட்டர் குருமூர்த்தி புரிந்து பேச வேண்டும் என்றும் தடித்த மோசமான வார்த்தைகளைத் திரும்ப பெற வேண்டும்; இல்லையென்றால் அதற்கான பலனை அவர் அனுபவிக்க வேண்டும என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் குறித்து துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் குருமூர்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் ஆண்மையற்றவர்கள் என்று குறிப்பிட்டிருந்தார். அவரின் இந்த டுவிட்டர் பதிவுக்கு பல்வேறு கண்டனங்கள் எழுந்து வருகின்றன. 

இந்த நிலையில் மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஆடிட்டர் குருமூர்த்திக்கு முகம் என்பதே கிடையாது. எந்த முகத்தைக் கொண்டு அவர் பேசுகிறார். ஒரு ஆடிட்டராக இருப்பவர், பத்திரிகையாளர் என்று சொல்லிக் கொள்பவர் இப்படிப்பட்ட வார்த்தையைக் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். அவர்கள் வேண்டுமானால் ஆண்மை இல்லாமல் இருக்கலாம். அம்மா வழியில் வந்தவர்கள் அனைவரும் ஆண்மை வீரியத்தோடு அதிமுகவை கட்டிக் காத்து கொண்டிருக்கின்றனர்.

இவர் என்ன கிங் மேக்கரா? என்று கேள்வி எழுப்பிய ஜெயக்குமார், எதுவுமே ஒரு அளவுக்குத்தான். அதிமுக கொதித்தெழுந்தல் என்ன நடக்கும் என்பதை அவர் புரிந்து பேச வேண்டும் என்றார். நாவடக்கம் வேண்டும். தடித்த மோசமான வார்த்தைகளை திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால் அதற்கான பலனை அவர் அனுபவிக்க வேண்டும்.

படிக்காத ஒருவர் கூட பண்பாளராக நடக்கிறார். ஆனால் படித்த ஒரு முட்டாளாக இருப்பதுதான் வேதனையாக உள்ளது. நடக்க ஆண்மை இல்லாதவன்தான் அதைப்பற்றி பேசுவான் என்று ஜெயக்குமார் காட்டமாக கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், அனைவரும் எல்லையை உணர்ந்து பேச வேண்டும். அவசியம் என்றால் ஆடிட்டர் குருமூர்த்தி மீது வழக்கு தொடருவது பற்றி பரிசீலிக்கப்படும். இழிச்சொல்லை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுதான் எங்கள் நிலைப்பாடு என்று ஜெயக்குமார் கூறினார்.