தி.மு.க பொருளாளராக இருந்த மு.க.ஸ்டாலின் அந்த கட்சியின் செயல் தலைவராகி தற்போது தி.மு.கவின் தலைவராகவும் ஆகிவிட்டார். அந்த வகையில் ஸ்டாலின் வசம் இருந்த செயல் தலைவர் என்கிற பதவி ஒழிக்கப்பட்டுவிட்டது. பொருளாளர் பதவியை மு.க.ஸ்டாலின், துரைமுருகனுக்கு கொடுத்துவிட்டார். இதன் மூலம் தி.மு.கவின் தலைவராக ஸ்டாலினும், பொதுச் செயலாளராக அன்பழகனும், பொருளாளராக துரைமுருகனும் செயல்பட்டு வருகின்றனர்.
   
இந்த மூன்று பதவிகளுக்கு அடுத்தபடியாக தி.மு.கவில் முக்கியத்துவம் வாய்ந்த பதவியாக கருதப்படுவது முதன்மைச் செயலாளர் பதவி. இந்த பதவியில் கடந்த 2015ம் ஆண்டு துரைமுருகன் நியமிக்கப்பட்டார். அவர் தற்போது பொருளாளர் ஆகிவிட்டார். இதனால் முதன்மைச் செயலாளர் பதவி காலியாக இருந்தது. பொருளாளர் பதவிக்கு எப்படி போட்டா போட்டி இருந்ததோ அதே போல் முதன்மைச் செயலாளர் பதவிக்கும் பலர் போட்டியிட்டனர்.


   
டி.ஆர்.பாலு, ஆ.ராசா, எ.வ.வேலு, ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் என ஒரு பட்டாளமே முதன்மைச் செயலாளர் பதவி கனவுடன் காய் நகர்த்தி வந்தது. ஆனால் டி.ஆர்.பாலுவும், ஆ.ராசாவும் தான் இந்த பதவியை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்று தீவிரம் காட்டி வந்ததாக சொல்லப்படுகிறது. பொருளாளர் பதவிக்கு ஆசைபட்டு டி.ஆர்.பாலு காய் நகர்த்தினார். ஆனால் அவரால் துரைமுருகனை ஓவர்டேக் செய்ய முடியவில்லை. இதே போல் ஆ.ராசாவும் நீண்ட நாட்களாக தி.மு.கவின் கொள்கை பரப்புச் செயலாளராகவே உள்ளார்.
   
ஆனாலும் தற்போது தினந்தோறும் அறிவாலயம் வந்து கட்சிப் பணிகளில் மு.க.ஸ்டாலினுக்கு ஆ.ராசா உறுதுணையாக இருந்து வருகிறார். இதனால் துரைமுருகன் வகித்த முதன்மைச் செயலாளர் பதவி தனக்கு கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று ஆ.ராசா எதிர்பார்ப்பில் இருந்ததாக சொல்லப்படுகிறது. கலைஞர் தலைவராக இருந்த போது அவருடன் எப்போதும் இருக்கும் துரைமுருகன் முதன்மைச் செயலாளராக இருந்தார். அதே போல் தற்போது ஸ்டாலினுடன் எப்போதும் இருப்பதால் ஆ.ராசாவும் அதே முதன்மைச் செயலாளர் பதவிக்கு ஆசைபட்டதாக சொல்லப்படுகிறது.


   
இதே சமயத்தில் பொருளாளர் பதவி கிடைக்காத ஏமாற்றத்தில் இருந்த டி.ஆர்.பாலுவோ முதன்மைச் செயலாளர் பதவியை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என்று தீவிரம் காட்டினார். ஸ்டாலினும் கூட ஆ.ராசாவை நியமிக்கலாமா? டி.ஆர்.பாலுவை நியமிக்கலாமா ? என்று ஒரு பட்டிமன்றமே நடத்தியதாக கூறப்படுகிறது. இறுதியில் பொருளாளர் பதவியில் வன்னியரான துரைமுருகன் இருக்கும் நிலையில் முதன்மைச் செயலாளராக மற்றொரு பெரும்பான்மை சமுதாயத்தை சேர்ந்தவர் இருப்பது நல்லத என்கிற முடிவுக்கு ஸ்டாலின் வந்துள்ளார்.


   
இதனை தொடர்ந்தே தேவர் சமுதாயத்தை சேர்ந்த டி.ஆர்.பாலுவை முதன்மைச் செயலாளர் ஆக்கியுள்ளார் ஸ்டாலின். விரைவில் ஆ.ராசாவுக்கு ஒரு முக்கியமான பதவி வழங்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. எது எப்படியோ தேவர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் தற்போது தான் முதன்முறையாக தி.மு.கவின் உயர் பொறுப்பிற்கு வந்துள்ளார்.

அதிமுகவின் முதல் MP ஆண்டித்தேவர் வக்கீல், எத்தனையோ தேவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் ஓபிஎஸ், நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல்   சினிவாசன் என கணக்கே இல்லாமல் சசிகலா புண்ணியத்தில் அதிமுகவில் அனைத்து பதவிகளிலும்  அந்த சமுதாயத்தினர் இருந்தனர். ஆனால் திமுகவில் இந்த குறுப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தலைவராகவோ, பொருளாலராகவோ,  பொதுச் செயளாலராகவோ இருந்ததில்லை முதல் முறையாக டி.ஆர்.பாலுக்கு கொடுத்ததால் அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்களின் வாக்குகளை வளைக்கவே இந்த திட்டம் என சொல்லப்படுகிறது.