The Madras High Court has dismissed the case following Stalins plea in connection with a confidence vote in the Assembly.
சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருப்பதால் புகழேந்தி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
வழக்கறிஞர் பி.புகழேந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி தமிழக முதல்வராக கே.பழனிசாமிக்கு தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப் பிரமாணம் செய்து வைத்ததாகவும், நம்பிக்கை வாக்கெடுப்பில், 122 அதிமுக எம்எல்ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வாக்களித்ததாகவும் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து உட்கட்சி பூசலால் 19 எம்எல்ஏ.க்கள் எடப்பாடி மீது நம்பிக்கை இல்லை எனக்கூறி தங்களது ஆதரவை வாபஸ் பெறுவதாக தமிழக ஆளுநர் வித்யா சாகர் ராவிடமும் நேரடியாக தங்களது கடிதங்களைக் கொடுத்துள்ளனர்.
இதனால் முதல்வர் கே.பழனிசாமி தலைமையிலான அரசு தற்போது பெரும்பான்மையை இழந்து விட்டது எனவும் அவரை நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உத்தரவிட ஆளுநர் தவறிவிட்டதாகவும் மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை உயர்நீதிமன்றத்திற்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருப்பதால் புகழேந்தி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
