அத்திவரதர் குளத்துக்குள் மறைக்கப்பட்டு வைத்து 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியில் எடுத்து வணங்கப்படுவது ஏன்? என இளம் ஜோதிடர் பாலாஜி தனது முக நூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

அதில், ‘’அத்தி மரத்தால் ஆன வரதர். அது கிருதயுகம். விஸ்வகர்மா, கிருதயுகத்தில் அத்தி மரத்தால் செய்யப்பட்ட மூர்த்தம். நான்கு மூர்த்தங்களில் இந்த மூர்த்தமும் ஒன்று. காஞ்சி மாநகரில், வரதராஜ பெருமாள் கோயிலில், புண்ணிய கோடி விமானத்தின் கீழே மூலவராக சேவை சாதித்தார் அத்தி வரதர். கிட்டத்தட்ட, 16ம் நூற்றாண்டு வரை இவரே இங்கு மூலவராக தரிசனம் தந்தார் என்கிறது ஸ்தல வரலாறு.

அந்நியப் படையெடுப்பின் போது, மூல மூர்த்தங்களையும் உத்ஸவ மூர்த்தங்களையும் எதிரிகளிடம் இருந்து காப்பாற்றுவதற்காக, கோயில் குளத்தினுள் உத்ஸவரான அத்தி வரதர் மறைத்து வைக்கப்பட்டார். இந்த விஷயம், கோயிலுக்குத் தொடர்புடைய ஒரேயொரு குடும்பத்துக்கு மட்டுமே தெரியும் வகையில் ரகசியம் பாதுகாக்கப்பட்டது. அந்த சமயத்தில், 40 ஆண்டுகளாக, மூலவரே இல்லாமல், பூஜைகள் ஏதும் செய்யப்படாமல் இருந்தது ஆலயம்.

இந்த நிலையில், ரகசியம் அறிந்த கோயில் தர்மகர்த்தா குடும்பத்து சகோதரர்கள் இறந்துவிட, அவர்களின் மகன்கள் அத்தி வரதர் இருக்கும் இடம் தெரியாமல், தேடும் பணியில் இறங்கினார்கள். பிறகு உடையார்பாளையம் எனும் ஊரின் வனப்பகுதியில், உத்ஸவ மூர்த்திகளைக் கண்டெடுத்தனர். கோயிலுக்குக் கொண்டுவந்து பூஜைகள் செய்யத் தொடங்கினார்கள்.

இதே சமயத்தில், காஞ்சியில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பழைய சீவரம் எனும் ஊரில் உள்ள மலையில், கல்லால் வடிக்கப்பட்ட தேவராஜ சுவாமியை, அத்தி வரதர் போலவே இருக்கிறாரே என வியந்து, எடுத்து வந்தனர். கோயிலின் மூலஸ்தானத்தில், அத்தி வரதர் இருந்த இடத்தில் இவரை வைத்து, பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கினர். அன்று முதல் வரதராஜ பெருமாள் கோயிலில், பூஜைகளும் வழிபாடுகளும் அமர்க்களப்படத் தொடங்கின.

1709ம் ஆண்டு எப்போதும் வற்றவே வற்றாத கோயிலின் குளம் வற்றியது. ஒரு சொட்டு நீர் கூட இல்லாத நிலையில், அங்கே மறைத்து வைக்கப்பட்டிருந்த அத்தி வரதர் காட்சி தந்தார். பிறகு, ‘அத்தி வரதர், இப்போது போலவே கோயில் திருக்குளத்தில் இருக்கட்டும். 40 வருடங்களுக்கு ஒருமுறை எடுத்து வெளியே கொண்டுவந்து, 48 நாட்கள் பூஜை செய்வது என்றும் அப்போதும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டது.

ஒரு இந்து கோயிலில் கூட்டங்கள் அதிகமானால் போதும் அந்த பிரபலமடைந்த கோயிலைப் பற்றி அவதூறு எழும். அவர் 'புத்தர்' அத்திவரதர் (பெருமாள்) இல்லை என்று கிளப்பி விடுகிறார்கள். மனிதர்களுக்கு தான் இப்படி பிரச்சினை என்றால் இறைவனுக்குமா?

சயன கோலத்தில் இருக்கக்கூடிய பெருமாள் மீன ராசியை குறிக்கக்கூடிய அங்கே தான் சுக்கிரன் உச்சம் அடைகிறார். புதன் நீசம் அடைகிறார். புதனுடைய அதி தேவதை பெருமாள் ஆகும். அவர் மீன ராசியில் சயன கோலத்தில் இருப்பார். அங்கே இருக்கின்ற உச்சமான சுக்கிரன் அமர்ந்த கோலத்தில் இருக்கும். அப்படி தான் சயன கோலத்தில் இருக்கும் பெருமாள் தொப்புள் நாபியில் பிரம்மனும் கழுத்து பகுதியில் லட்சுமி தாயாரும் சிரித்த முகத்துடன் உச்ச பலத்துடன் காட்சி தருவார்கள்.

இவர்களை தரிசிக்க மீன ராசிக்கு உண்டான அதிபதியான 'குருவின்' பரிபூரண பலம் உங்களுக்கு கிடைக்கும். அதனால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் மேலும் பொருளாதாரரீதியாக நெருக்கடிகள் இருப்பவர்களுக்கு நிச்சயம் பொருளாதார வழி கிடைக்கும்.

இன்னும் 25 நாட்கள் தான் அத்திவரதர் காட்சி தருவார். பிறகு மீண்டும் 40 ஆண்டுகள் பொறுத்திருக்க வேண்டும். முடிந்தவரை எல்லோரும் சென்று பாருங்கள்’’ என விளக்கியுள்ளார் டிரெண்டிங் ஜோதிடர் பாலாஜி ஹாசன்.