எமர்ஜென்ஸியில் ஸ்டாலினை கைது செய்ய தமிழக போலீஸ் தயாராக இருந்தது.

மதுராந்தகம் சென்றுவிட்டு கோபாலபுரம் திரும்பிய ஸ்டாலினிடம், ஆட்சி கலைக்கப்பட்டு, முதல்வர் பதவியை இழந்திருந்த கருணாநிதி ‘காவல்துறை உன்னை தேடுகிறது. சிறைக்கோட்டம் செல்ல தயாராக இரு.’ என்றார். ஸ்டாலினும் குளித்து உடை மாற்றிவிட்டு சிறைக்கு தயாரானார். உண்மையில் சொல்லப்போனால் சாவை தொட்டுவிட்டு வர தயாரானார்.

ஸ்டாலினுக்கு அப்போது வயது 23. திருமணமாகி ஐந்தே மாதங்கள்தான் ஆகியிருந்தன. சிறைக்கு தயாராகி நிற்கும் ஸ்டாலின் முன்னே கலங்கிய கண்களுடன் வந்து நின்றார் துர்கா. ‘நான் பத்து நாள் சுற்றுப்பயணம் செல்வதாக நினைத்துக் கொள். அதற்குள் வந்துவிடுவேன். பிரச்னை ஒன்றும் ஆகாது. ’ என்று சொல்ல, துர்காவும் தலையாட்டினார் கனத்த மனதுடன்.

ஸ்டாலினுக்கு நிச்சயம் நன்றாகவே தெரியம், பத்து நாட்களுக்குள் நிச்சயம் விடமாட்டார்கள்! கூடவே மரணத்தின் வாசலை நோக்கியே தான் நகர்கிறோம் என்று. ஆனால் புது மனைவியிடம் இதை சொன்னால், அவர் நொறுங்கிவிடுவார்! என்று வழியில்லாமல் பொய் சொன்னார்.

கருணாநிதியை நோக்கி ஸ்டாலின் தலையாட்டியதும், போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு போன் போட்ட கருணாநிதி ‘ஸ்டாலின் வந்துவிட்டான். வந்து அழைத்துச் செல்லுங்கள்.’ என்றார். இதற்குள் ஸ்டாலின் கைதாகப் போகும் விஷயம் சென்னையை சேர்ந்த கழக தொண்டர்களுக்கு தெரியவர, அவர்கள் கோபாலபுர இல்லத்தின் முன் வந்து குவிந்துவிட்டார்கள்.

வந்த போலீஸ் ஸ்டாலினை எளிதாக கைது செய்தது. ஆனால் கோபாலபுரம் வீட்டு வாசலில் இருந்து தெருமுனையை தொட முடியவில்லை போலீஸ் வாகனத்தால். காரணம் ஆவேச தொண்டர்கள் ஆதங்கத்துடன் முழங்கியபடி வாகனத்தை முற்றுகையிட்டனர். கண்ணீர் கடலுக்கு நடுவில் ஸ்டாலின் சிறை நோக்கி பயணப்பட்டார்.

துர்கா பற்றி பழைய விஷயங்களை நினைவு கூறும்போதெல்லாம் ஸ்டாலின் இப்பவும் ‘அவசரநிலையில கைதானப்ப, பத்து நாள்ள திரும்பி வந்துடுவேன், பிரச்னை இருக்காதுன்னு பொய் சொல்லிட்டு போனேன்.’ என்று மறக்காமல் சொல்வார்.

அந்த அளவுக்கு ஆழப்பதிந்துவிட்ட பொய் அது! ஆனால் தி.மு.க.வின் செயல்தலைவரான ஸ்டாலினின் வரலாற்றில் ஆழ பதிந்துவிட்ட அவசியமான பொய் அது.