தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு 230 ஏக்கர் நிலத்தை கொடுக்கப்பட்டது திமுக ஆட்சியில்தான் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவையில் கூறியுள்ளார்.

சட்டப்பேரவைக் கூட்டத்தை திமுக புறக்கணிப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று 3-வது நாள் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு திமுக ஆட்சியின்போதுதான் 230 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டதாக கூறினார். 2010 ஆம் ஆண்டு தொழில்துறை அமைச்சராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது 230 ஏக்கர் நிலம் ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு வழங்கப்பட்டது என்றார்.

மேலும் பேசிய அவர், சட்டப்பேரவை நிகழ்ச்சியில் திமுக பங்கேற்க முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். அதிமுக அரசைப் பொறுத்தவரை எந்தவித காழ்ப்புணர்ச்சியும் கிடையாது என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக பேச எதிர்கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் உரிமை உண்டு என்றும், அவர்கள் எப்போது வேண்டுமானாலும் அவைக்கு வரலாம்; அதற்கு ஆட்சேபனை ஏதும் இல்லை என்றும் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் கூறினார். 

சட்டப்பேரவைக் கூட்டத்தை ஒருநாள் புறக்கணித்துவிட்டு, மீண்டும் பங்கேற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், தன்னுடைய ஜனநாயக கடமையை ஆற்ற மீண்டும் வந்துள்ளனர். அதேபோல் எதிர்கட்சி உறுப்பினர்களும் தாமாக முன்வந்து பங்கேற்க வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.