எதிர்க்கட்சிகளின் வியூகம் ஒருபுறம், சொந்தக் கட்சியினரின் அதிருப்தி மறுபுறம் என ஜோலார்பேட்டை அரசியல் களம் தகித்துக் கொண்டிருக்கிறது.
திருப்பத்தூர் மாவட்ட அரசியலில் ஜோலார்பேட்டை தொகுதி எப்போதும் ஒரு விறுவிறுப்பான தொகுதியாகவே பார்க்கப்படுகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில், அப்போதைய அதிமுக அமைச்சர் கே.சி. வீரமணியை சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, திமுகவின் தேவராஜ் வெற்றி பெற்றார். இந்த வெற்றிக்கு அமைச்சர் எ.வ. வேலுவின் தேர்தல் வியூகமும், சிறுபான்மையினர் வாக்குகளை ஒருங்கிணைத்த செஞ்சி மஸ்தானின் பங்களிப்பும் முக்கியக் காரணமாக அமைந்தது. ஆனால், தற்போது அடுத்த தேர்தல் நெருங்கும் வேளையில், ஜோலார்பேட்டை தொகுதிக்குள் அரசியல் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது.

கட்சியினரின் அதிருப்தி
எம்.எல்.ஏ தேவராஜ் மீது தொகுதி மக்களிடமும், கட்சி நிர்வாகிகளிடமும் சில அதிருப்திகள் நிலவுவதாகத் தகவல்கள் கசிகின்றன. அடிப்படை வசதிகளைத் தாண்டி, தொகுதிக்கு எனப் பெரிய அளவிலான திட்டங்களைக் கொண்டு வரவில்லை என்பதும், ஒன்றிய செயலாளர்களை அரவணைத்துச் செல்லவில்லை என்பதும் அவர் மீதான முக்கியக் குற்றச்சாட்டுகளாக உள்ளன.
அனைத்திற்கும் மேலாக, கட்சிப் பொறுப்புகளைத் தனது குடும்பத்திற்குள்ளேயே வளைத்துப் போட்டுக் கொண்டார் என்ற விமர்சனம் திமுக உடன்பிறப்புகள் மத்தியிலேயே பெரும் பேசுபொருளாகியுள்ளது. மகனுக்கு மாவட்ட மாணவரணி பொறுப்பு, மருமகளுக்கு ஒன்றிய குழு தலைவர் பதவி, தமக்கு மாவட்ட செயலாளர் பதவி என அதிகார மையங்கள் அனைத்தும் ஒரே குடும்பத்தில் குவிந்துள்ளதைச் சொந்தக் கட்சியினரே சுட்டிக்காட்டுகின்றனர்.
தொகுதி மாற்றத்தால் சலசலப்பு
அதனால்தான் இந்த முறை அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியை வெல்லுவது கடினம் என கணக்கு போட்டு பார்த்த, தேவராஜ் இனி இந்த தொகுதியில் தேர மாட்டோம் என கருதி "தனது சொந்த தொகுதியான வாணியம்பாடியை" குறிவைத்து சமீபத்தில் நடந்த நேர்காணலில் கலந்து கொண்டார் என்கிறார்கள்.
மூத்த அமைச்சர் துரைமுருகன் ஆதரவாளராக இருந்து தற்போது அமைச்சர் எ.வ.வேலு ஆதரவாக மாறிய தேவராஜ், அவரிடம் பல 'சி' க்களை கொட்டி கொடுத்து வாணியம்பாடி தொகுதியை வசமாக்க முயற்சிக்கிறார். இவரோடு திருப்பத்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ நல்லத்தம்பியும் கூட்டணி அமைத்து எங்களுக்கு சாதி சான்றிதழ் வழங்குவதை தடுத்து வருவதாகவும் முன்பு தகவல் பேசப்பட்டது.
இந்த சம்பவத்தை மோப்பம் பிடித்த அதிமுக முன்னாள் அமைச்சர் வீரமணி, குருமன்ஸ் சமுதாய முக்கியஸ்தர்களை தேர்தல் வருவதால் திடீரென சந்தித்து ஆறுதல் கூறியும், தனக்கு ஆதரவு அளித்தால் சாதி சான்றிதழை தடைகள் இல்லாமல் வழங்க வழி செய்வதாக உறுதி அளித்து வருவதாக கூறுகிறார்கள் விவமறிந்த குருமன்ஸ் பழங்குடியியைச் சேர்ந்த திமுக உடன்பிறப்புக்கள்.
குருமன்ஸ் பழங்குடியின சான்றிதழ் சர்ச்சை
ஜோலார்பேட்டை தொகுதியில் சுமார் 30 ஆயிரம் வாக்குகளைக் கொண்ட குருமன்ஸ் பழங்குடியின மக்களின் (ST) சாதி சான்றிதழ் விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. சமீபத்தில் ஒரு நேர்காணலில் தேவராஜ் 'கமிட்டி' என்ற வார்த்தையைப் பயன்படுத்தியது, பழங்குடியின மக்களுக்குச் சான்றிதழ் வழங்குவதைத் தடுக்கும் முயற்சியோ எனச் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைச் சாதகமாக்கிக் கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி, குருமன்ஸ் சமுதாய மக்களைச் சந்தித்து, தமக்கு ஆதரவளித்தால் சான்றிதழ் சிக்கல்களைத் தீர்ப்பதாக வாக்குறுதி அளித்து வருகிறார்.
எம்.எல்.ஏ தேவராஜின் அதிரடி விளக்கம்
இத்தனை சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் எம்.எல்.ஏ தேவராஜ் தனது விளக்கத்தை அளித்துள்ளார். அவர் கூறுகையில், "நான் எதற்காகச் சான்றிதழ் வழங்கக் கூடாது என்று தடுக்கப் போகிறேன்? அதற்கான அதிகாரம் என்னிடம் இல்லை. பாஜக பிரமுகர்கள் தான் நான் பேசியதைத் தவறாகத் திரித்துக் கூறி வருகின்றனர். எங்கள் ஆட்சியில்தான் குருமன்ஸ் பழங்குடி மக்களுக்கு (ST) சான்றிதழ் வழங்கப்பட்டது. அதன் மூலம் அந்தச் சமுதாய இளைஞர்கள் பலர் அரசு வேலைக்குச் சென்றுள்ளனர். மலைவாழ் மற்றும் குருமன்ஸ் பழங்குடியினர் அனைவரும் எங்கள் மக்களே. அவர்கள் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்."
மேலும், தொகுதி மாறுவது குறித்த கேள்விக்கு மிகவும் உறுதியாகப் பதிலளித்த அவர், "நான் ஜோலார்பேட்டை தொகுதியில்தான் மீண்டும் நிற்கிறேன். இது என் சொந்தத் தொகுதி, இங்கு மீண்டும் நான் வெல்வேன்" என அதிரடியாகக் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சிகளின் வியூகம் ஒருபுறம், சொந்தக் கட்சியினரின் அதிருப்தி மறுபுறம் என ஜோலார்பேட்டை அரசியல் களம் தகித்துக் கொண்டிருக்கிறது. "பொய் பிரச்சாரங்களை முறியடிப்பேன்" என தேவராஜ் சபதமேற்றுள்ள நிலையில், ஜோலார்பேட்டை தொகுதி மக்கள் மீண்டும் அவருக்கு வாய்ப்பளிப்பார்களா? அல்லது மாற்றம் நிகழுமா? என்பது தேர்தல் முடிவில்தான் தெரியும்.

