மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்ற எல்.முருகன் பயோடேட்டாவில் ‘கொங்கு நாடு’ என்று குறிப்பிட்டது குறித்த விவாதம் தொடங்கியிருக்கிறது. 

மத்திய மோடி அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. 45 பேர் புதிய அமைச்சர்களாகப் பதவியேற்றனர். தமிழக பாஜக தலைவர் எல்.முருகனும் மத்திய இணையமைச்சராகப் பதவியேற்றார். அவருக்கு தகவல் தொழில்நுட்பம், கால்நடை, மீன்வளம், பால்வளம் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டன. முன்னதாக மத்திய அமைச்சராக பதவியேற்றவர்கள் பற்றி மத்திய அரசு சார்பில் பயோடேட்டா வெளியாகியிருந்தது. அதில், எல்.முருகனின் பயோடேட்டா'வில் அவர் பிறந்த நாமக்கல் மாவட்டத்தைக் குறிப்பிடாமல் கொங்கு நாடு எனக் குறிப்பிட்டிருந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற அமைச்சர்களுக்கெல்லாம் அவர்களின் மாவட்டத்தைக் குறிப்பிட்டிருந்த நிலையில், எல்.முருகனுக்கு மட்டும் கொங்கு நாடு எனக் குறிப்பிட்டது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. மத்திய அரசை ஒன்றிய அரசு திமுகவினர் அழைப்பதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். அதற்கு விளக்கம் அளிக்கும் பாஜகவினர், ‘மத்திய அரசு நினைத்தால் ஒரு மாநிலத்தைப் பிரிக்க முடியும். ஒரு மாநிலம் நாங்கள் பிரிந்துசெல்வதாகக் கூற முடியாது” என்று விளக்கம் தந்திருக்கிறார்கள். 
இதற்கு வலு சேர்க்கும் வகையில், கொங்கு பகுதிகளை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று சிலர் அவ்வப்போது கோரிக்கை வைப்பதுண்டு. அதுபோன்றவர்கள் கொங்கு நாடு என்று மத்திய அரசு குறிப்பிட்டிருப்பதை வரவேற்கிறார்கள். மேற்கு தமிழகத்தை பிரிக்க வேண்டும் என்று அவ்வப்போது சமூக ஊடகங்களில் எழுதி வரும் அரசியல் விமர்சகரான பொங்கலூர் மணிகண்டன், “கொங்கு நாடு தனி மாநிலம் விரைவில், மேற்கு தமிழகம். மத்திய அரசு எளிதாக அறிவிக்கும்” என்று பதிவிட்டுள்ளார். இதன்மூலம் மேற்கு தமிழகம் அல்லது கொங்கு நாடு பற்றிய விவாதம் தொடங்கியிருக்கிறது.