10 ஆண்டுகளாக ஆட்சியில்  இல்லாததால் வெறிகொண்டு ஆட்சிக்கு வரவேண்டும் என துடித்துக்கொண்டிருக்கும் திமுக, மக்களிடையே பொய் பிரச்சாரங்களை அள்ளி வீசி வருகிறது என துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார். ஆனால் அப்பொய் பிரச்சாரம் ஒருபோதும் மக்கள் மத்தியில் எடுபடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாநகர் மாவட்டம் காங்கேயம் ஒன்றிய அதிமுக சார்பில் தகவல் தொழில்நுட்ப பிரிவு இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் திருப்பூர் மாநகர மாவட்ட கழக செயலாளரும், துணை சபாநாயகராக பொள்ளாச்சி ஜெயராமன் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது: 

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கழகம் தனக்குப் பின்னாலும் தமிழகத்தில் நூறு ஆண்டுகள் ஆட்சி செய்யும் என்று சூளுரைத்தார். எனவே அனைவரும் உணர்வுபூர்வமாக பணியாற்றினால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில், அதிமுக ஆட்சி தொடர்வதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு பல்வேறு பணிகளை நிறைவேற்றி உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து குளங்கள், நீர்நிலைகள், தூர்வாரப்பட்டு தண்ணீர் பஞ்சம் தமிழ்நாட்டில் எந்த ஒரு பகுதியிலும் வராதவாறு நீர் மேலாண்மை திட்டத்தை முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார். கொரோனா ஆரம்பம் முதல் தற்போது வரை நோய் பரவாமல் கட்டுக்குள்வைக்கப்பட்டுள்ளது. 

ஓட்டுப்போட்ட மக்களை ஏமாற்றாமல் அதிமுக அரசு கடந்த 10 ஆண்டுகளில் 50 ஆண்டு கால சாதனையை படைத்துள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 மாத காலமே உள்ள நிலையில், திமுகவினர் கடந்த 10 ஆண்டுகளாக  ஆட்சியில் இல்லாததால் ஆட்சிக்கு வரவேண்டும் என்று வெறிகொண்டு துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக மக்கள் மத்தியில் பொய் பிரச்சாரத்தை அள்ளி வீசி வருகின்றனர். ஆனால் அந்த பொய் பிரச்சாரங்களை மக்கள் ஒருபோதும் நம்பப் போவதில்லை, அதிமுக ஆட்சியில் மீண்டும் அரியணை ஏறுவது உறுதி, அதிமுக ஆட்சி மூன்றாவது முறையாக தொடர ஒவ்வொருவரிடமும் கடந்த ஐந்து ஆண்டுகளாக கழகம் செய்த நன்மைகளை மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்க்க வேண்டும். இவ்வாறு பொள்ளாச்சி ஜெயராமன் பேசினார்.