குட்கா புகாரில் வருமான வரித்துறை கோப்பு காணாமல் போக காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனையை அனுமதிக்க எந்தெந்த அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது என்பது குறித்த ஆவணங்களை கடந்த 2016 ஆம் ஆண்டு வருமான வரித்துறை அரசிடம் ஒப்படைத்தது.

ஆனால் அரசு நடவடிக்கை எடுக்காமல் இழுக்கடித்து வந்தது. இதைதொடர்ந்து, வருமான வரித்துறை அதிகாரி பாலகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் ராம மோன ராவிடம் அளித்த அந்த ஆவணம் மட்டும் காணவில்லை என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறுகின்றன.

தலைமை செயலகத்தில் இருந்தே ஆவணங்கள் மாயமாகியுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், திமுக செயல் தலைவர் ஸ்டாலின், குட்கா ஊழல் ஆவணம் மாயமாக காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் மற்றும் இந்நாள் தலைமைச் செயலர் ராமமோகன ராவ், கிரிஜா மீது நடவடிக்கை தேவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விசாரணை சுதந்திரமாக நடக்க டி.ஜி.பி .ராஜேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்துவிட்டு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் கேட்டுகொண்டுள்ளார்.