7.5 சதவீத இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் ஆளுநர் ஒப்புதல் அளித்த பின்னரே மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் எனவும், அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் ஒப்புதல் அளிக்கும்படி கையெழுத்திட கவர்னரை கட்டாயப்படுத்த முடியாது எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  கடந்த சில தினங்களுக்கு முன்னர் செய்தியாளரிடம் பேசிய அமைச்சர், ஆளுநரின் முடிவுகள் பாசிட்டிவாக இருக்கும் என்று கூறிய நிலையில், தற்போது ஆளுநரை கட்டாயப்படுத்த முடியாது என தெரிவித்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. 

கடந்த செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி தமிழக அமைச்சரவை நீட் தேர்வில் வெற்றிபெற்ற தமிழக கிராமப்புற, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்குவதற்கு ஒரு சட்டத்தை இயற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளது. ஆனால் இன்றுவரை அதன் மீது ஆளுநர் எந்த முடிவையும் எடுக்காமல் இழுத்தடித்து கொண்டிருக்கிறார். எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் விதிவிலக்கின்றி இச்சட்டத்தை ஆதரிக்கின்றன. சமூக நீதிக்கு எதிராக, இட ஒதுக்கீட்டுக்கு எதிராக செயல்படும் பாஜக கூட இதற்கு எதிராக கருத்து தெரிவிக்கவில்லை. 

ஆயினும் இன்று வரை அந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இந்நிலையில் தமிழக அமைச்சர்கள் சில நாட்களுக்கு முன்னர் ஆளுநரை சந்தித்து மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதே நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கடிதம் மூலம் பதிலளித்துள்ள ஆளுநர் நீட் ஒதுக்கீடு மசோதா குறித்து அனைத்து கோணங்களிலும் கலந்தாலோசனை நடத்தி வருகிறேன், அதில் முடிவெடுக்க எனக்கு மூன்று அல்லது நான்கு வாரங்கள் தேவைப்படுகிறது என கூறியுள்ளார். 

இந்நிலையில் ஆளுநர் நான்கு வாரம் அவகாசம் கோரியிருப்பது குறித்த செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மீன்வளத்துறை அமைச்சர் பகிர்ந்துள்ளார். அதில்,  திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தாங்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாகவே 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் கிடைத்தது எனப் பெயரெடுக்க பார்க்கிறார், அதேநேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் அவர் கவர்னருக்கு கடிதம் எழுதியதில் எந்த தவறும் இல்லை, மொத்தத்தில் ஆளுநரின் ஒப்புதல் பெற்ற பின்னரே மருத்துவ கலந்தாய்வு நடத்தப்படும் என கூறியுள்ளார். அதே நேரத்தில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவிற்கு கையெழுத்து போடும்படி ஆளுநரை கட்டாயப்படுத்த முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். ஆளுநர் நிச்சயம் நல்ல முடிவு எடுப்பார் என கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், தற்போது ஆளுனரை இந்த விவகாரத்தில் கட்டாயப்படுத்த முடியாது எனக் கூறியிருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.