The government started a web site in RKNagar

தேர்தல் விதிமுறைகளை மீறி ஆர்.கே.நகர்.இன் என்ற இணைதளத்தை ஆளும் கட்சி தொடங்கி உள்ளதாகவும், இந்த இணையதளத்தை முடக்க வேண்டும் என்றும் திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி, தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகரில் வரும் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. வேட்பாளர்கள், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் ஆர்.கே.நகர் முழுவதும் தீவிர கண்காணிப்பு
பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆர்.கே.நகரில் 65 பறக்கும் படைகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், 20 குழுக்கள் அனைத்தையும் வீடியோ பதிவு செய்து வருகிறது. அதேபோல், துணை ராணுவத்தின் 5 கம்பெனி வீரர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 5 கம்பெணி ராணுவ படை வர உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுவரை நடந்த சோதனைகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ரொக்கமும், 500 குக்கர்களும், 1 அனுமதியில்லாத துண்டு பிரசுரங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 

ஆர்.கே.நகரில் பிறப்பிக்கப்பட்டுள்ள தேர்தல் விதிமுறைகளை மீறி, மக்களின் குறைகளை தெரிவிப்பதற்காக அதிமுக சார்பில் இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளதாக, தேர்தல் அதிகாரியிடம் திமுக நேற்று புகார் அளித்தது.

ஆர்.கே.நகர் மக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்க ஆர்.கே.நகர்.இன் என்ற இணையதளத்தை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் தொடங்கி வைத்தனர். இந்த இணையதளத்தில் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. மக்கள் தங்கள் குறைகளைப் பதிவிட்டால், அதற்கு உடனடியாக தீர்வு காணப்படும் என்றும் அந்த இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆர்.கே.நகர்.இன் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதை திமுக சார்பில், நேற்று தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி அளித்துள்ளார். இணைதளத்தை முடக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் திமுக குறிப்பிட்டுள்ளது. அரசின் முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் தேர்தல் சமயத்தில் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது தவறு என்றும், வாக்காளர்களைக் கவரவே இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் புகார் மனுவில் திமுக குறிப்பிட்டுள்ளது.