The Government should fully retract the bus fare hike - M.K.Stalin

எதிர்கட்சிகள், மக்கள், மாணவர்கள் போராடியதால் பெயரளவுக்கு உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

டீசல் விலை உயர்வு, போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம், பராமரிப்பு செலவு, உதிரி பாகங்களின் விலை உயர்வு ஆகியவற்றை காரணம் காட்டி கடந்த 20 ஆம் தேதி முதல் பேருந்து கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியது. சுமார் 50% முதல் 100% பேருந்து கட்டணம் உயர்த்தியது. 

பேருந்து கட்டண உயர்வு காரணமாக ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். தினக்கூலி மற்றும் மாத ஊதியதாரர்கள் கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். பேருந்து கட்டண உயர்வை கண்டித்து எதிர்க்கட்சியினரும் பொதுமக்களும் மாணவர்களும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

பேருந்து கட்டண உயர்வை அடுத்து, பொதுமக்கள், ரயில்கள் மற்றும் தனியார் பேருந்துகளை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். பேருந்து கட்டணத்ததை ஏற்றியபோதும் அரசுக்கு எதிர்பார்த்த வருவாய் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், பேருந்து கட்டணத்தை தமிழக அரசு குறைத்துள்ளது. இந்த கட்டணம், ஒரு ரூபாய் என்ற அளவிலேயே குறைக்கப்பட்டுள்ளது. அதாவது 5 ரூபாய் என்பதில் இருந்து 4 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு இன்று வெளியானது. இது நாளை முதல் அமல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்குப் பிறகு, மு.க.ஸ்டாலின், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், பேருந்து கட்டண குறைப்பு என்பது கண்துடைப்பு நாடகமே. பேருந்து கட்டண உயர்வை முழுமையாக அரசு திரும்பப்பெற வேண்டும், எனவே திட்டமிட்டப்படி நாளை மறியல் போராட்டம் நடைபெறும் என்றார்.

மறியல் போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி அளிக்காது. என்றாலும் அதனை மீறியே மறியலை நடத்துகிறோம். எதிர்கட்சிகள், மக்கள், மாணவர்கள் போராடியதால் பெயரளவுக்கு பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழக அரசின் நிலைப்பாட்டைப் பொறுத்திருந்து பார்த்து, மீண்டு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும் என்றார். போராட்டங்களில் கைதானவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் அப்போது ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். மேலும், அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்கும் கண்டன பொதுக்கூட்டம் நடத்தவும் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார் ஸ்டாலின்.