ஸ்டெர்லைட் ஆலையை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பது, வரலாற்றுச் சிறப்பு மிகுந்த தீர்ப்பு என எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கோரி ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து ஆலையை திறக்க தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை, வரலாற்றுச் சிறப்பு மிகுந்த தீர்ப்பு என எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்  வரவேற்றுள்ளார். 

இதுதொடர்பாக நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சுற்றுச்சூழலுக்கும், மனித உயிர்களுக்கும் பெரும் கேடு விளைவித்து வந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் 22ம் தேதி நடைபெற்ற 100-வது நாள் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் 14 பேர் போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாயினர்.
துப்பாக்கிச் சூடு குறித்து நீதி விசாரணை கோரியும், ஆலையை மூடக்கோரியும் எஸ்.டி.பி.ஐ. கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

அதைத் தொடர்ந்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக அரசாணை பிறப்பித்தது. அதன்படி 2018,மே மாதம் 28-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. அரசாணையை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிகோரி தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் மனு அளித்தது. மனுவை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் மூவர் குழுவை அமைத்து ஆய்வுசெய்து கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் விசாரணை முடிவில் மூன்று வாரத்துக்குள் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கலாம் என ஸ்டெர்லைட்டுக்குச் சாதகமான தீர்ப்பை வழங்கியது தேசிய பசுமைத் தீர்ப்பாயம். 

தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.வழக்கில் வேதாந்தாவின் மனு நிராகரிக்கப்பட்டு, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கும் தடை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆலையைத் திறக்கக்கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மீண்டும் துவக்கம் முதலே விசாரிக்கப்பட்ட இவ்வழக்கில், கடந்த ஜனவரியில் விசாரணை முடிவடைந்த நிலையில் தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. 

 

இந்நிலையில் இவ்வழக்கில் இன்று (ஆக.18) காலை தீர்ப்பு வழங்கிய நீதியரசர்கள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு, வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த அனைத்து ரிட் மனுக்களையும் தள்ளுபடி செய்ததோடு, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி இல்லை என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்பு மிகுந்த தீர்ப்பை எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்கிறது. 

உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பின் மூலம் தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மிகுந்த மகிழ்ச்சியும் நிம்மதியும் அடைந்துள்ளனர். உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்கள், குரல் கொடுத்த அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஆகிய அனைவருக்கும் வெற்றியின் உந்து சக்தியாக இருக்கும் என கருதுகிறேன். எனினும், இந்த தீர்ப்பை எதிர்த்து மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட, தாமிர ஆலைக்கு எதிரான கொள்கை முடிவுகளே நிரந்தர சட்டத்தீர்வாக இருக்கும் என்பதால் தமிழக அரசு அத்தகைய கொள்கை முடிவையும் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.