The government is the overseer of the opposition panneer selvam issue
தர்மயுத்தம் நடத்தி தமிழகத்தை கண்கலங்க வைத்தார் பன்னீர்செல்வம். ஆனால் இப்போது பெரும் பதவிக்கு சென்ற பிறகு ’அதிகாரத்தை தனது சொந்தங்களுக்காக பயன்படுத்துகிறார்.’ என்று அவரை பற்றிய சில புகார்கள் சிறகடிக்க துவங்கியுள்ளன.
அந்த வகையில் வந்து நிற்கிறது...கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் பதவி விவகாரம்.
அதாவது தமிழகத்தில் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞராக சமீபத்தில் நான்கு பேர் அறிவிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் ஒருவர் வழக்கறிஞர் செல்லப்பாண்டியன். இவர் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் சம்பந்தி.

சசிக்கு எதிராக பன்னீர் தனி அணியாக செயல்பட்டபோது அவரது ஆதரவாளர்கள் வகித்து வந்த அரசு பதவிகள் பிடுங்கப்பட்டன. அதில் செல்லப்பாண்டியனும் ஒருவர். உயர் நீதிமன்றத்தில் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞராக பதவி வகித்து வந்தார்.
இதில் கடுப்பான செல்லப்பாண்டியன் ‘நான் வாதாடிய பல வழக்குகளுக்கு பல லட்சம் ரூபாய் கட்டணம் வழங்காமல் பாக்கி வைத்திருக்கிறது அரசு. அதை உடனே வழங்க வேண்டும்.’ என்று வழக்கும் தொடுத்தார்.
அந்த வழக்கு நிலுவையில் உள்ளது, இந்த நிலையில் அவருக்கு மீண்டும் அரசு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து ‘அரசாங்கத்தை எதிர்த்து வழக்கு போட்டவருக்கு கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் பொறுப்பா?’ என அதே கட்சியை சேர்ந்த வழக்கறிஞர்கள் புலம்பிக் கொட்டுகிறார்கள்.

தினகரன் அணி இந்த விவகாரத்தை கையிலெடுத்து பஞ்சாயத்து செய்யும் மூவ்களில் இருக்கிறதாம்.
இதுதானாய்யா உங்க தர்மமும், யுத்த நேர்மையும்? என்று கிண்டலடிக்கிறது தினா கோஷ்டி.
