வாகன ஓட்டிகள் மூல உரிமத்தை கையில் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவை அரசு உடனடியாக திரும்பப்பெற்று இப்போதுள்ள நிலையே தொடருவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

வாகன ஓட்டிகள் அனைவரும் நாளை முதல் தங்களது ஒரிஜினல் ஓட்டுனர் உரிமத்தை கைவசம் வைத்திருக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் ரூ.500 அபராதம், 3 மாத சிறைத் தண்டனை ஆகிய இரண்டில் ஒன்றோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. 

இந்நிலையில் இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அரசின் உத்தரவும் நடைமுறை சாத்தியங்களையும், எதார்த்தத்தையும் புரிந்து கொள்ளாமல் பிறப்பிக்கப்பட்ட அபத்தமான ஆணையாகும் என தெரிவித்துள்ளார். 

விதி மீறல்களுக்காக ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டவர்கள் அதன் நகலை வைத்துக் கொண்டு வாகனங்களை ஓட்டுவதாகவும் அதைத் தடுக்கவே அனைத்து ஓட்டுனர்களும் மூல உரிமத்தை கையில் வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருக்கிறார். 

இது மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்தும் செயலுக்கு ஒப்பானதாகும் எனவும், போக்குவரத்து துறையிடம் உள்ள ஓட்டுனர் உரிமம் குறித்த தகவல் தொகுப்பை காவல்துறை தகவல் தொகுப்புடன் இணைப்பதன் மூலம் ஓட்டுனர் உரிமம் செல்லுபடியாகும் நிலையில் உள்ளதா? என்பதை அறிய முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

ஓட்டுனர்கள் பணி நிமித்தமாக பல ஊர்களுக்கு செல்ல வேண்டியிருக்கும் எனவும், அப்போது மூல உரிமம் தொலைவதற்கோ, மழையில் நனைந்து வீணாவதற்கோ வாய்ப்புகள் உள்ளன எனவும் தெரிவித்துள்ளார். 

அவ்வாறு தொலைந்தாலோ, சேதமடைந்தாலோ புதிய உரிமம் வாங்கும் வரை ஒரு மாதமோ, இரு மாதங்களோ பணி செய்ய முடியாது போகும் எனவும், ஓட்டுனர்கள் பணி செய்யும் இடங்களில், பாதுகாப்புக்காக அவர்களின் உரிமங்களை வாங்கி வைத்துக் கொள்வார்கள் என்பதால், ஊதியத்திற்கு வாகனம் ஓட்டுபவர்கள் மூல உரிமத்தை கையில் வைத்திருப்பது சாத்தியமற்றது எனவும் வலியுறுத்தியுள்ளார். 

எனவே, வாகன ஓட்டிகள் மூல உரிமத்தை கையில் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவை அரசு உடனடியாக திரும்பப்பெற்று இப்போதுள்ள நிலையே தொடருவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என தனது அறிக்கையில் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.