பாஜக தனது கூட்டணிக் கட்சியாக இருந்தாலும், அதன் வளர்ச்சி அதிமுகவுக்கு நல்லதல்ல என அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார் 

எதிர்கட்சி யார்?

தமிழகத்தில் சுமார் 50 வருடங்களுக்கு மேல் திமுக அதிமுக இடையே மட்டுமே போட்டி நடைபெற்று வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக திமுக பாஜக இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை கூறிவருகின்றனர். இதனால் அதிமுக என்கிற கட்சி தமிழகத்தில் உள்ளதா? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. திமுக ஆட்சி அமைந்து ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில் பாஜக, திமுக அரசு மீது கடும் குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறது. மின் வாரியத்தில் டெண்டர் வழங்கியதில் முறைகேடு தொடர்பாக குற்றம்சாட்டிய பாஜக, தமிழக ஆளுநரை சந்தித்து புகார் மனுவையும் அளித்தது. இதனை தொடர்ந்து முதலமைச்சரின் வெளிநாடு பயணம் தொடர்பாகவும் புகார் கூறியதையடுத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது மான நஷ்ட ஈடு கேட்டு திமுக நோட்டீஸ் அனுப்பியது. இது போன்று புகாரும், பதிலடியும் தினமும் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் அதிமுக என்ற கட்சி என்ன் செய்து கொண்டிருக்கிறது என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதை மெய்ப்பிக்கும் வகையில் சசிகலா ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் மக்கள் பிரச்சனையில் அதிமுக முன்னெடுக்கவில்லையென குற்றம்சாட்டியிருந்தார்.

அதிமுகவிற்கு நல்லதல்ல

இந்தநிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் புரட்சி தலைவி பேரவை சார்பாக பயிலரங்கம் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்னையன், பாஜக தனது கூட்டணிக் கட்சியாக இருந்தாலும், அதன் வளர்ச்சி அதிமுகவுக்கு நல்லதல்ல என கூறினார். திராவிட கொள்கைகள் மற்றும் தமிழகத்தின் உரிமைகளுக்கு எதிராக பாஜக செயல்படுவதாக குற்றம்சாட்டிய அவர், காவிரி நதிநீர் மற்றும் முல்லை பெரியாறு விவகாரத்தில் மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சனைகளில் தேசிய கட்சி இரட்டை வேடம் போடுகிறது என தெரிவித்தார். அ.தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு பாஜகவின் அணுகுமுறையை சமூக ஊடகங்கள் மூலம் அம்பலப்படுத்த வேண்டும் என்று பொன்னையன் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பேசியவர், தமிழகத்திற்கு ஆதரவாக பாஜக தனது கொள்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என பொன்னையன் அறிவுரை வழங்கினார்.

இதையும் படியங்கள்

அதிமுகவில் முக்கிய நிர்வாகி அதிரடி நீக்கம்.. சாட்டையை சுழற்றிய ஓபிஎஸ், இபிஎஸ்..!