இந்தியாவில் வரும் 16ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.  உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. அது இந்தியாவிலும் வெகுவாக குறைய தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸை முற்றிலும் அழிக்க  மற்ற நாடுகளைபோல இறுதி ஆயுதமாக தடுப்பூசியை இந்தியா கையில் எடுத்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளும் தங்களது நாட்டில் மக்களுக்கு தடுப்பூசி வழங்கி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கோவி ஷீல்ட், கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதித்து மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. எனவே தற்போது அது நாடு முழுவதும் வினியோகிக்கப்பட்டு வருகிறது.  

இந்நிலையில் இந்தியாவில் பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் வரும் ஜனவரி 16 ஆம் தேதி முதல் தொடங்கும் எனவும், இதை பிரதமர் மோடி துவக்கி வைக்க உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக நாடு முழுதும் உள்ள 3 கோடி சுகாதார பணியாளர்களுக்கு மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதேபோல் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், மற்றும் நோய்த்தாக்க அதிக வாய்ப்புள்ளவர்களுக்கு தடுப்பூசி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி போடத் துவங்கும் முதல் நாள் மட்டும் சுமார் 3 லட்சம் சுகாதார மற்றும் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்றும், முதல் கட்டமாக நாடு முழுவதும் 3 ஆயிரம் மையங்களில் நாளொன்றுக்கு 100 பேருக்கு தடுப்பூசி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட ஒவ்வொரு மையத்திலும் அதிகமானோர் வரவழைக்கப்படுவதை தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறை மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதே நேரத்தில் தடுப்பூசி மையங்களை அதிகரிக்கவும், தடுப்பூசி விநியோகத்தை சீராக தொடரவும் மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது. தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதும் தவிர்ப்பதும்  தனிநபர் விருப்பம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தடுப்பூசி விநியோகம் குறித்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.  தலைநகர் டெல்லியில் தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டுள்ளதாகவும், ஆரம்பத்தில் 81 இடங்களில் தடுப்பூசி வழங்கப்படும் என்றும், ஒவ்வொரு மையத்திலும் தினமும் 100 பேருக்கு தடுப்பூசி போடப்படும் என்றும், தடுப்பூசி திட்டம் வாரத்தில் நான்கு நாட்கள் செயல்படும் என்றும் அவர் கூறியுள்ளார். தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கை ஒரு சில நாட்களில் 175 ஆக உயர்த்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.