மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த, இந்தியாவின் முதல் விமான ஓட்டி என்ற பெருமையை பெற்றுள்ளார்  கேரளமாநிலத்தைச் சேர்ந்த ஆதம் ஹாரி, அம்மாநில  சுகாதாரம் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் கே.கே. சைலஜா முயற்சியில் ஆதம் ஹாரி இந்த உயரத்தை எட்டியுள்ளார்.

இந்தியாவில் உள்ள எல்லா மூன்றாம் பாலினத்தவரும் எதிர்கொள்வதைப் போலவே தான் ஆதம் ஹாரியும் கடுமையான பிரச்சனைகளுக்கு ஆளாக நேர்ந்தது. ஹாரி திருநங்கை என்று தெரிந்தவுடன் அவரின் குடும்பத்தாரால் வீட்டிலிருந்து அவரை ஈவு இரக்கமின்றி வெளியேற்றினர். ஏறத்தாழ அனாதையாக்கப்பட்ட நிலையில் தான் அவரின் பள்ளிப்படிப்பை தொடர்ந்துள்ளார். குழந்தைப் பருவம் முதல் அவர் கனவு கண்ட 'விமான ஓட்டி' ஆகும் வாய்ப்பு இனி கிடைக்காது என்று மனமுடைந்து விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டிருந்த போது. ஏழ்மையில் உழன்று, கல்வி கற்க வழியின்றி ஆதரவற்ற நிலையில் இருந்த ஆதம் ஹாரிக்கு நிதி உதவியை, அரசின் விசேஷ அனுமதியுடன், மாநில சமூக நலத்துறை செய்தது கொடுத்தது. ஆதம் ஹாரியின் விமான ஓட்டி பயிற்சிக்குத் தேவையான 23.34 லட்சம் ரூபாய் நிதி உதவியை மாநில சமூகநலத்துறை அளித்தது.

 

அதோடு வணிக ரீதியான விமான ஒட்டியாகத் தேவையான தகுதிக்கு குறைபாடுகள், அவருக்கு பெரும் சவாலாக இருந்தன. அதில் முக்கியமானது என்னவென்றால். அவர் விமான ஓட்டிக்கான உரிமம் (தனிப்பயன்) வைத்திருந்து, 200 மணிநேரம் விமானியாக பணியாற்றியிருந்தால்த் தான் வணிக ரீதியான விமானி பயிற்சிக்கு சேர முடியும். ஆக, 200 மணிநேர பயிற்சி அடைவது உள்ளிட்ட, எல்லா தடைகளையும் தாண்ட அரசு அவருக்கு உதவியது. திருவனந்தபுரம், ராஜீவ் காந்தி விமான ஓட்டி பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்து அவர் வணிக ரீதியிலான விமான ஓட்டுநர் உரிமத்தை ஆதம் ஹாரி பெற்றுள்ளார். தற்போது ஆதம் ஹாரி, தனது பயிற்சியை நிறைவு செய்து விமான ஒட்டிக்கான தனி உரிமத்தை பெற்றவுடன் அமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

இறுதியாக...ஒன்றைக் கூறாமல் இருக்க முடியவில்லை...சமூக நலத்துறை என்ற துறை இது போன்ற அர்த்தமுள்ள செயல்பாடுகளால் அலங்கரிக்கப்பட வேண்டிய ஒரு துறை என்பதை மீண்டும் ஒருமுறை கேரள அரசு நம்மூர் உள்ளிட்ட பல மாநில அரசுகளுக்கும், இந்த நற்செயலின் மூலம் பாடம் சொல்லித் தந்திருக்கிறது என்றால் அது மிகையல்ல...