ஸ்கீம் என்றால் என்னவென்று கேட்பது காலதாமதம் செய்வதற்கான வழி என்றுதான் பார்க்க வேண்டி உள்ளதாகவும் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே தீர வேண்டும் எனவும் மக்கள் நீதி மய்யத்தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த 6 வார கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. ஆனால் இதுவரை மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை.

கர்நாடக சட்டமன்ற தேர்தல் வரும் மே 12ம் தேதி நடைபெற இருக்கிறது. அதை கருத்தில்கொண்டே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு தயங்குவதாக தமிழக அரசியல் கட்சிகளும் விவசாயிகளும் குற்றம்சாட்டுகின்றன.

இதற்கிடையே மேலாண்மை வாரியம் அமைக்காமல், மேற்பார்வை ஆணையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இன்றுடன் காலக்கெடு முடியும் நிலையில், இதுவரை எந்த வாரியமும் அமைக்கப்படவில்லை.

மேலும் மத்திய அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பில் ஸ்கீம் என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என கேள்வி எழுப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கால அவகாசம் முடியும் வரை பொறுத்திருப்போம் என தமிழக அரசு சார்பில் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வந்தது. ஆனால், இன்றுடன் அவகாசம் முடியும் நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு சார்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஸ்கீம் என்றால் என்னவென்று கேட்பது காலதாமதம் செய்வதற்கான வழி என்றுதான் பார்க்க வேண்டி உள்ளதாகவும் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே தீர வேண்டும் எனவும் மக்கள் நீதி மய்யத்தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். 

படிப்படியாக நமது நிலை இறங்கி கொண்டே செல்கிறது எனவும் இது நல்லது அல்ல எனவும் குறிப்பிட்டார்.