எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆட்சியில் கூட அறிவிக்கப்படாத திட்டங்களை தமிழக பட்ஜெட்டில் அறிவித்து விவசாயிகளை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு. 

சட்டப்பேரவையில் 2019-2020 க்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் துணைமுதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், அதில், ‘’ 2 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்தப்படுத்த ரூ.1361 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 90 சதவீத மானிய விலையில் விவசாயிகளுக்கு 10 குதிரை திறன் கொண்ட 2000 பம்பு செட்டுகள் வழங்கப்படும்.

5000 ஒருங்கிணைந்த பண்ணை அலகுகள் அமைக்க ரூ.101.62 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ரூ.100 கோடி செலவில் உழவர் உற்பத்தியாளர் குழுக்களும், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளும் உருவாக்கப்படும். உழவர் உற்பத்தியாளர்களை ஒருங்கிணைக்க உழவர் உற்பத்தியாளர் அமைப்பு கொள்கை உருவாக்கப்பட்டு வருகிறது. வேளாண் இயந்திரயமாக்கலுக்காக ரூ.172 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 128 வட்டார அளவிலான வேளாண் இயந்திரங்கள் வாடகை மையமாக்க 360 கிராம அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. பழங்கள் மற்றும் காய்கறி சாகுபடியை ஊக்குவிக்க ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இயற்கை வேளாண்மை சான்று அளிக்கும் மையங்கள் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்படும்.

வேளாண்மை - தோட்டக்கலை கல்லூரிகளை மேம்படுத்த ரூ.79.73 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேளாண்மைத்துறைக்கு மட்டும் பட்ஜெட்டில் ரூ.10,550 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரும் நிதி ஆண்டில் ரூ.10 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. பயிர் கடன் மீதான வட்டி தள்ளுபடிக்கு ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது’’ என அவர் தெரிவித்துள்ளார். இதுவரை விவசாயிகளுக்கு எந்தப்பட்ஜெட்டிலும் இவ்வளவு அறிவிப்புகள் வழங்கப்பட்டதில்லை எனக் கூறப்படுகிறது. இதனை விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.