குறுநில மன்னர்களின் முடிவு எங்களை ஒன்றும் செய்யமுடியாது எனவும், எடப்பாடி தரப்பினர் தங்கள் தலையிலேயே மண்ணை வாரி போட்டு கொண்டதாகவும் கர்நாடக அதிமுக செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். 

அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. 

இதையொட்டி இன்று காலை 10 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.

அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் டிடிவி.தினகரனை கட்சியில் இருந்து நீக்குவதாக தீர்மானம் நிறைவேற்றி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக அதிமுக செயலாளர் புகழேந்தி , துரோகத்தின் உச்சகட்டம் எடப்பாடி பழனிசாமி எனவும், எடப்பாடியின் அறிவிப்பு ஒரு நாடகம் எனவும் தெரிவித்தார். 

குறுநில மன்னர்களின் முடிவு எங்களை ஒன்றும் செய்யமுடியாது எனவும், எடப்பாடி தரப்பினர் தங்கள் தலையிலேயே மண்ணை வாரி போட்டு கொண்டதாகவும் குறிப்பிட்டார். 

எடப்பாடி பழனிசாமியின் நாடகம் விரைவில் முடிவுக்கு வரும் எனவும், திரை மறைவில் எடப்பாடி அணி பன்னீர் அணியுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.