முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் ஆகியோருடன் சமாதானமே கிடையாது என்று டி.டி.வி தினகரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் சமயத்தில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க எந்த ஒரு கட்சியும் முன்வரவில்லை. காங்கிரஸ் தி.மு.க மற்றும் தினகரனுடன் கூட்டணி சேர ஆர்வம் காட்டுகிறது. பா.ஜ.கவும் கூட தி.மு.கவுடன் கூட்டணி அமைந்தால் நன்றாக இருக்கும் என்கிற மனநிலையிலேயே உள்ளது. சின்ன சின்ன கட்சிகள் கூட அ.தி.மு.க.வுடன் கூட்டணிக்கு தயாராக இல்லை. இதனால் நாடாளுமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்கிற குழப்பம் அ.தி.மு.க.வின் நிர்வாகிகள் பலருக்கு ஏற்பட்டுள்ளது. 

இடைத்தேர்தல் என்றாலும் கூட பரவாயில்லை பொதுத் தேர்தலை சமாளிப்பது கடினம் என்றே அவர்கள் கருதுகின்றனர். ஆளுமை மிக்க தலைவரோ நல்ல கூட்டணியோ இல்லாமல் நாடாளுமன்ற தேர்தலில் களம் இறங்கினால் தோல்வி உறுதி என்று நிர்வாகிகள் பலர் அஞ்சுகின்றனர். எனவே தினகரனுடன் சமதானமாக போய்விடலாம் என்கிற பேச்சு அ.தி.மு.க நிர்வாகிகள் இடையே உருவாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக தினகரனுடன் சமாதானம் ஆகி அவருடன் இணைந்து தேர்தலை எதிர்கொண்டால் நன்றாக இருக்கும் என்பது அவர்களின் கருத்தாக உள்ளது. இது குறித்து விரைவில் சிலர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் டி.டி.வி தினகரன் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அவரிடம் தற்போதைய அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் உங்களுடன் வந்தால் சமாதானமாக செல்வீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தற்போதைய சூழலில் எந்த அமைச்சர்களையும் எங்கள் பக்கம் சேர்த்துக் கொள்ள நாங்கள் தயாராக இல்லை என்று தினகரன் பதில் அளித்துள்ளார். அதாவது எடப்பாடி பழனிசாமி அணியுடன் சமாதானம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்கிற நிலைப்பாட்டில் தினகரன் உறுதியாக இருப்பதே இந்த பேட்டி மூலம் தெரியவந்துள்ளது.