The DMK who tried to give the talk to the fishermen

தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மீனவர்களுக்கான வாக்கி டாக்கி வழங்கும் திட்டத்தை கிடப்பில் போட்ட குதிரைபேர அதிமுக ஆட்சியால் தான் இன்றைக்கு ஆயிரக்கணக்கான மீனவர்கள் காணாமலும், இறந்தும் போயிருக்கிறார்கள் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 

கன்னியாகுமரி மாவட்டத்தை ஓகி புயல் தாக்கி 14 நாட்கள் கடந்தும் மீட்பு பணிகளை முடுக்கி விடாமல் இருக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து திமுக சார்பில் இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதில், திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களை காக்க மறந்த மத்திய மாநில அரசை கண்டிக்கும் வகையில் இந்த போராட்டம் நடைபெறுவதாகவும் காணாமல் போயிருக்கும் மீனவர்களில் எத்தனை பேர் இறந்திருக்கிறார்கள், இன்னும் எத்தனை பேர் உயிரோடு இருக்கிறார்கள் என்கிற அந்த கணக்கை கூட எடுக்க முடியாத நிலையில் ஒரு ஆட்சி தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருப்பதாகவும் குற்றம் சாட்டினார். 

இதுபோன்ற அரசை உலகத்திலேயே பார்க்கமுடியாது எனவும் ஒரு பேரழிவு தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். 

எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் இதுவரை கன்னியாகுமரியில் பாதிக்கப்பட்ட 35 கிராமங்களை சந்தித்து ஆறுதல் கூறியதாகவும் அவர்களுக்கு தேவையான சில உதவிகளையும் சில பொருட்களையும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வழங்கி இருப்பதாகவும் குறிப்பிட்டார். 

தமிழகத்தில் எதிர்கட்சிகள் மட்டுமல்லாமல் பல்வேறு அமைப்புகளும் பாதிக்கப்பட்ட இடத்தை ஆய்வு செய்யும் போது முதலமைச்சர் மட்டும் நேற்றுவரை சென்றாரா என கேள்வி எழுப்பினார். 

தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மீனவர்களுக்கான வாக்கி டாக்கி வழங்கும் திட்டத்தை கிடப்பில் போட்ட குதிரைபேர அதிமுக ஆட்சியால் தான் இன்றைக்கு ஆயிரக்கணக்கான மீனவர்கள் காணாமலும், இறந்தும் போயிருக்கிறார்கள் என குற்றம் சாட்டினார். 

முதலமைச்சரை இயக்கி கொண்டிருப்பது திமுக தான் எனவும் மத்திய மாநில அரசுகள் மீனவர்களை மீட்க உடனடி நடவடிக்கையில் இறங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.