முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என டிடிவி ஆதரவாளரான பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ வெற்றிவேல் தெரிவித்துள்ளார். 

அதிமுக டிடிவி கட்டுப்பாட்டுக்குள் சென்றதால் ஆட்சியை கைப்பற்ற விரும்பினார். இதனால் ஆத்திரமடைந்த எடப்பாடி அமைச்சரவை டிடிவி எதிராக செயல்பட ஆரம்பித்தது.

இதைதொடர்ந்து எடப்பாடி பன்னீருடன் கூட்டணி வைக்க முடிவு செய்தார். ஆனால் பன்னீர் அணியோ நீண்ட நாட்களாக பிடிகொடுக்க வில்லை. ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை அமைக்க வேண்டும் எனவும், ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் எனவும், சசிகலா குடும்பத்தை ஓரங்கட்ட வேண்டும் எனவும் பன்னீர் அணி கோரிக்கை விடுத்து வந்தனர். 

இதற்காக பன்னீர் தரப்பில் போராட்டமும் அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. இதைதொடர்ந்து இன்று செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை போயஸ்கார்டனில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த டிடிவி ஆதரவாளரான பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ வெற்றிவேல், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என தெரிவித்தார்.