திமுகவின் கதை 2021 தேர்தலோடு முடிந்து விடும். எல்லோரும் ஒன்று கூடி ஒரு நல்ல மனிதரிடம் ஆட்சி அதிகாரத்தை கொடுங்கள் என எழுத்தாளர் மாரிதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். 

இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ’’நாளை தமிழகம் திரும்புகிறேன். அனைவரும் திமுக- திக எதிர்ப்பு என்ற ஒற்றை புள்ளியில் தீவிரமாக இயங்க வேண்டிய நேரம் இது. உங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், திமுக அழிக்கப்பட வேண்டும், பிரிவினைவாதிகள், தீவிரவாதிகள் அவர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் திக- திமுக போன்ற இயக்கங்கள் அழித்தொழிக்க வேண்டும் என்பதில் ஒன்றுபடுவீர். 

உங்களுக்குள் ஒற்றுமை இல்லை என்றால் அந்த ஒன்று நடக்காது. அதற்காகவே ரஜினி- பாஜக, அது, இது என்று தினமும் எதையாவது கிளப்பிவிட்டுக் கொண்டே இருக்கிறார்கள் திமுக அடிமை ஊடகங்கள். எதிலும் திசை திரும்பாதீர். நோக்கம் ஒன்று. திமுக- திக ஒழித்து கட்டுவது. ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

தேர்தல் வெற்றி தி.மு.க ஆதரவானது அல்ல. அது அவர்கள் செய்த வெறுப்பு அரசியலின் முடிவில் மாற்று யாரும் இல்லை என்பதால் மக்கள் திமுகவிற்குப் போட்ட வோட்டு. அவ்வளவு தான். அது முடிந்துவிட்டது. இனி போராட்டம் நடத்தத் திருமுருகன் காந்தி, முகிலன் என்று புதிய போராளிகளை உருவாக்கி நாடகம் நடத்த முடியாது. மக்கள் விழிப்புணர்வு பெற்று வருகிறார்கள். எனவே துணிந்து செயலாற்றினால் திமுக முகத்திரையைக் கிழித்து மக்களிடம் அந்த கட்சியை நிர்வாணமாக நிற்க வைத்து மக்கள் அவர்கள் கையாலேயே இந்த கொள்ளை கூட்டத்தை விரட்டி அடிக்க முடியும்.

இந்த 2021 தேர்தல் மட்டும் திமுக தோல்வி அடைந்தால் கதை அதோடு முடிந்தது. வெறும் கருணாநிதி அவர்களின் குடும்பம் அவர்களை அண்டிப் பிழைக்கும் 30 குடும்பம், அதை வைத்து ஒட்டி பிழைப்பு நடத்தும் ஒரு 300 குடும்பம் இவ்வளவு தான் திமுக. உறுதியான வாக்கு வங்கி என்றால் 15 சதவிகிதம் கூட கிடையாது. 13 கட்சி கூட்டணி வைத்து ஆர்.கே.நகர் தேர்தலில் அதிமுக இரண்டாகப் பிரிந்து நிற்கும் போது டெப்பாசிட் இழந்த கட்சி தான் இது. எனவே திமுக ஆதரவு என்பது என்றுமே மக்களிடம் இருந்தது இல்லை.

வேறு வழி இல்லை என்பதால் திமுக வாக்கு சென்றுள்ளது. எனவே முடியும் என்று அனைவரும் நம்புங்கள் தீவிரமாக எதிர்ப்பு காட்டத் தயார் ஆகுங்கள். எந்த காலத்திலும் இல்லாத அளவிற்கு திமுகவிற்கு பெரும் எதிர்ப்பை மக்கள் மத்தியில் உருவாக்குவோம். உங்கள் குரலை நான் பேசுகிறேன். ஒன்று கூடி ஒரு நல்ல மனிதரின் கையில் ஆட்சி அதிகாரத்தை 2021 கொடுக்க இணைந்து செயல்பட முற்படுங்கள்.

தயவு கூர்ந்து சின்ன சின்ன கருத்து வேறுபாடுகளைப் பெரிதாக்கி மைய நோக்கமான இந்துக்களின் விரோதி திமுக, இந்தியாவின் விரோதி திக மற்றும் பிரிவினைவாதிகளை ஒழிக்க வேண்டும் என்பதைத் தோல்வி அடையச் செய்துவிடாதீர். 300 நாட்களுக்குச் சரியாகத் திட்டமிட்டு, ஒற்றுமையாகச் செயல்பட்டால் நிச்சயம் நம் நோக்கம் வெற்றிபெறும்.

திமுக எந்த பெரிய அரசியல் கார்ப்பரேட் நிறுவனத்தை அமர்த்தி வேலை செய்தாலும் அதைத் தாண்டி என் குழு வெற்றிக்கான வழிமுறைகளை வகுக்கும். எனக்குத் தேவை எல்லாம் உங்கள் ஒற்றுமை மட்டுமே. பெரும் எதிர்ப்பை காட்ட ஹவாலா பணத்தைக் கொட்டி ஒரு கும்பல் எனக்கு எதிராக வேலை செய்ய காத்திருக்கிறது என்பதை அறிவேன். திமுக பட்டத்து இளவரசருக்கு அடிமை வேலை செய்யும் அயோக்கிய கும்பலின் வேலை அறிவேன். என்றாலும் மீண்டும் முழு வீச்சோடு வேலை செய்ய நாளை தமிழகம் திரும்புகிறேன். தயவு கூர்ந்து ஒற்றுமையாக நில்லுங்கள்’’ என அவர் தெரிவித்துள்ளார்.

ஹிமாச்சல பிரதேசம் சென்றுள்ள அவர் நாளை தமிழகம் திரும்ப உள்ளார். திமுகவை எதிர்த்து, அவர் பாஜகவுக்கு ஆதரவாக பேசி வருகிறார். ஆனால், அவர் ரஜினிகாந்தின் தீவிரவிசுவாசி. ஆகையால் ஆட்சி அதிகாரத்தை ஒரு நல்ல மனிதரிடம் கொடுங்கள் என அவர் கோரிக்கை வைத்திருப்பது ரஜினிக்காக எனக் கூறப்படுகிறது.