The director of the charge against the BJP
மத்திய பாஜக ஆட்சி, சிறிய விஷயங்களைக் கூட மத ரீதியில் அணுகுகிறது என்று இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் குற்றம் சாட்டியுள்ளார். மெர்சல் பட விவகாரம் குறித்து அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் மெர்சல். இப்படம் வெளியாகும் முன்பு பல சர்ச்சைகளின் காரணமாக இழுக்கடிக்கப்பட்டு வந்தது.
பல எதிர்ப்புகளையும் மீறி தீபாவளி அன்று மெர்சல் படம் வெளியானது. வெளியான பின்னரும் மெர்சல் திரைப்படம் பல சர்ச்சைகளுக்கு ஆளாகி வருகிறது. காரணம், அப்படத்தில் மத்திய அரசு கொண்டுவந்த ஜி.எஸ்டி குறித்தும் பணமதிப்பிழப்பு குறித்த வசனங்கள்தான்.
இந்த வசனங்கள் ரசிகர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் பலத்த வரவேற்பை பெற்றுள்ளன. ஆனால், பாஜக மத்தியில் கடும் கொந்தளிப்பை பரிசாக கொடுத்துள்ளது. மேலும் மெர்சல் படத்தில் இருந்து அந்த குறிப்பிட்ட வசனங்களை நீக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தி வருகிறது. தமிழ் திரையுலகை சேர்ந்தோர் மெர்சல் திரைப்படத்துக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வெங்காயம் திரைப்படத்தை இயக்கிய சங்ககிரி ராஜ்குமாரும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். மத்திய பாஜக ஆட்சி சிறிய விஷயங்களைக் கூட மத ரீதியில் அணுகுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பண மதிப்பிழப்பு உள்ளிட்டவள்ளால் ஏழை - நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டது அனைவருக்கும் தெரியும் என்றும் அவர் கூறினார். திரைத்துறையினருக்கு திமுக ஆட்சியில் சுதந்திரம் இருந்தது என்று இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கூறியுள்ளார்.
