பாஜக ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் பெறும் வளர்ச்சியை எட்டியுள்ளது. கடந்த முறை 4 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக இந்த முறை கூடுதலாக 44 வார்டுகளை கைப்பற்றியிருக்கிறது.

தெலுங்கானா மாநிலத்தில் 150 வார்டுகளை கொண்ட ஐதராபாத் மாநகராட்சிக்கான தேர்தல் டிசம்பர் 1-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, காங்கிரஸ், பாஜக, அசாதுதீன் ஓவைசியின் அனைத்திந்திய மஜ்லிஸ் இ இத்திஹாதுல் முஸ்லிமீன் (எஐஎம்ஐஎம்) உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன.

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் மொத்தம் 1,222 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். டி.ஆர்.எஸ் டிஆர்எஸ் 150, பாஜக 149, காங்கிரஸ் 146, தெலுங்கு தேசம் 10, ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி 51 இடங்களில் போட்டியிட்டன. இதில் 46.55 சதவீத வாக்குகள் பதிவாகின. அமித் ஷா, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ஸ்மிருதி இரானி உள்ளிட்டோர் நேரடியாக வந்து வாக்கு சேகரித்தனர். அதேசமயம் மாநிலத்தை ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, ஹைதராபாத் மக்களவை தொகுதியை தன்வசம் வைத்துள்ள ஏஐஎம்ஐஎம் கட்சியும் வலுவான போட்டியை ஏற்படுத்தியது.

மொத்தம் உள்ள 150 வார்டுகளில் 149 வார்டுகளின் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி (டிஆர்எஸ்) 55 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 48 வார்டுகளிலும், அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 44 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் 99 இடங்களில் வெற்றி பெற்ற டிஆர்எஸ் கட்சி இந்த முறை கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. பாஜக  வளர்ச்சி பெற்றுள்ளது. கடந்த முறை 4 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக இந்த முறை கூடுதலாக 44 வார்டுகளை கைப்பற்றியிருக்கிறது. 

டிஆர்எஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக இருந்தபோதிலும், மேயர் பதவியை பெற முடியாத நிலை உள்ளது. மேயர் பதவியை பெற குறைந்தபட்சம் 67 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஏஐஎம்ஐஎம் கட்சி ஆதரவு அளித்தால் மட்டுமே டிஆர்எஸ் மேயர் பதவியை பெற முடியும். வாக்குசதவிகிதத்தின்படி மாநிலத்தை ஆளும் டி.ஆர்.எஸ் கட்சி 36 சதவிகிதமும், பாஜக 35.5 சதவிகித வாக்குகளும் பெற்றுள்ளன. இதன்படி ஆளும் கட்சிக்கு இணையாக பாஜக தெலுங்கானாவில் வலுவான இடத்திற்கு முன்னேறி உள்ளது. அதாவது இரு கட்சிகளுக்கும் இடையே இருக்கும் வாக்கு சதவிகிதம் 1 சதவிகிதத்துக்கும் குறைவாகவே இருக்கிறது.