தமிழகத்தில் உள்ள அரசு பணியிடங்களை தமிழர்களுக்கே ஒதுக்க சட்டம் இயற்ற வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்தியப் பிரதேச மாநிலத்தில், அரசு வேலைகளை மாநில இளைஞர்களுக்கு வழங்க சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமீபத்தில் அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் அறிவித்தார். இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டினரின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வரும் தமிழக அரசு வேலை தமிழர்களுக்கே என்ற முழக்கம் மீண்டும் வலுப்பெறத் தொடங்கியது. இதனிடையே, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், தமிழ்நாட்டில் உள்ள அரசு வேலைவாய்ப்புகளை தமிழர்களுக்கே வழங்க மாநில அரசு உரிய சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னியரசு மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வன்னியரசு, ’’தமிழ்நாட்டில் உள்ள அரசு வேலைவாய்ப்புகளை முழுவதுமாக தமிழர்களுக்கு வழங்க வேண்டும். தனியார் துறை வேலைவாய்ப்புகளில் மாநில இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். 

விரைவில் மாநில அரசு உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலை இதே கோரிக்கையை முன்வைத்து விசிக எதிர்கொள்ளும்’என்று அவர் தெரிவித்தார்.