கிராமசபைக் கூட்டம் மக்கள் நலன் கருதி அரசு ரத்து செய்துள்ளதாகவும், ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுமென்றே இதில் அரசியல் செய்கிறார் எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். கல்விக் கண் திறந்த  காமராஜர் அவர்களுடைய 46வது நினைவு தினத்தையொட்டி திநகரில் உள்ள நினைவு இல்லத்தில் காமராஜர் இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கூறுகையில், 

 

இந்திய அளவில் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றவர் காமராஜர் என்றும், கிங் மேக்கர் என்று சொன்னால் அந்த புகழுக்கு சொந்தக்காரர் காமராஜர் மட்டுமே என்றும் புகழாரம் கூறினார். மேலும் ஜாதி மதம் கடந்து வாழ்ந்தவர் அவர், இந்நிலையில்  காமராஜர் இல்லத்தை சீரமைக்க 7 லட்சம் ரூபாய் செய்தித்துறை சார்பில் ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், கொரோனா காலத்தில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. எனவே திரையரங்குகள் திறப்பது குறித்து விரைவில் ஒரு அறிவிப்பு வரும் என்றார். கிராம சபை கூட்டங்களில் சமூக இடைவெளி கடைபிடிக்க முடியாது. அதன் காரணமாகவும், மக்கள் நலனை கருத்தில் கொண்டு தான் ரத்து செய்யப்பட்டது எனக் கூறிய அமைச்சர், முதலமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் சமூக இடைவெளி பின்பற்றவில்லை என்று கூறுவது தவறு எனவும், கிராம சபை கூட்ட விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டும் என்றே அரசியல் செய்கிறார் எனவும் குற்றஞ்சாட்டினார்.