The current rulers know who the real AI is on the side
உண்மையான அதிமுகவினர் யார் பக்கம் இருக்கிறார்கள் என தற்போதைய ஆட்சியாளர்களுக்கு தெரியும் எனவும் ஐந்தாறு பேர் சுயநலத்திற்காக செயல்படுவதை விட்டுவிட்டு உண்மையை உணர்ந்து நடவடிக்கையில் ஈடுபடுங்கள் எனவும் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 40707 வாக்குகள் வித்தியாசத்தில் ஆளுங்கட்சியான அதிமுக வேட்பாளர் மதுசூதனனை வீழ்த்தி தினகரன் அபார வெற்றி பெற்றார். வாழ்வா சாவா போட்டியில் அதிமுகவை வீழ்த்தி அரசியல் இருப்பை உறுதி செய்துள்ளார் தினகரன்.
அதிமுக அரசு, மத்திய பாஜக அரசு, தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் பல்வேறு நெருக்கடிகளையும் மீறி அபார வெற்றி பெற்ற தினகரனுக்கு, அதிமுக எம்.எல்.ஏக்கள் சிலரும் அமைச்சர்கள் சிலரும் வாழ்த்து தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த தகவல் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு கலக்கத்தை ஏற்படுத்தியது.
ஆர்.கே.நகரில் இரட்டை இலையை எதிர்த்து தினகரன் போட்டியிட சசிகலா மறுப்பு தெரிவித்ததாகவும் அவரை சமாதானப்படுத்தியே தினகரன் தேர்தலில் நின்றதாகவும் தகவல்கள் உலவின. இந்நிலையில், ஆர்.கே.நகரில் போட்டியிட்டு சொன்னபடியே வெற்றியும் பெற்றார் தினகரன்.
இந்நிலையில் இன்று உறுதிமொழி ஏற்று எம்.எல்.ஏவாக பொறுப்பேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் உண்மையான அதிமுகவினர் யார் பக்கம் இருக்கிறார்கள் என தற்போதைய ஆட்சியாளர்களுக்கு தெரியும் எனவும் ஐந்தாறு பேர் சுயநலத்திற்காக செயல்படுவதை விட்டுவிட்டு உண்மையை உணர்ந்து நடவடிக்கையில் ஈடுபடுங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
துரோகம் செய்தவர்கள் தயவு செய்து நினைத்து பாருங்கள் எனவும் நிர்வாகிகளை நீக்கவேண்டி இருந்தால் ஒன்றரை கோடி பேரையும் நீக்க வேண்டி இருக்கும் எனவும் குறிப்பிட்டார்.
என்ன செய்வதென்றே தெரியாமல் ஆட்சியாளர்கள் பயத்தில் இருக்கிறார்கள் எனவும் சின்னமும் கட்சியும் மட்டும் இருந்தால் போதாது எனவும் தெரிவித்தார்.
ஆட்சியாளர்கள் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் துரோகம் செய்த நீங்கள் சிந்தித்து பார்த்து வரும்காலங்களில் நல்லவர்களாக செயல்படுங்கள் தெரிவித்தார்.
