The court can not interfere in the speaker administration

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படம், சபாநயகர் தனபால், சட்டப்பேரவையில் திறந்து வைத்தது குறித்து, சபாநாயகர் நிர்வாகத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் ஜெயலலிதா படத்தை அகற்றக் கோரும் வழக்கு, இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தமிழக சட்டமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார். 

ஆனால், சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று உச்சநீதிமன்றம் உறுதி செய்திருப்பதால் அவரது புகைப்படத்தை சட்டமன்றத்தில் திறக்கக் கூடாது என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. 

ஜெயலலிதாவின் உருவப்படம் அரசு நலத்திட்டங்களில் இடம் பெறக் கூடாது என திமுக எம்எல்ஏ அன்பழகன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த நிலையில் தான், சட்டசபையில் ஜெயலலிதா படம் திறக்கப்பட்டதை எதிர்த்தும் அன்பழகன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர், நீதிபதி அப்துல் குத்தூஸ் அமர்வு தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது. இதுபோன்ற குற்றவாளியின் படங்களை சட்டமன்றத்தில் வைக்கக்கூடாது என்று திமுக சார்பில் வாதம் செய்யப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி அமர்வு சபாநாயகரின் நிர்வாக அதிகாரத்தில் உயர்நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறினார்.

நீதித்துறையை எளிதாக அணுகும் முறையை இதுபோன்ற வழக்குக்காக தவறாக பயன்படுத்தக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார். இதனை அடுத்து திமுக தரப்பில் போடப்பட்ட வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.