முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு சசிகலா குடும்பம்தான் காரணம் எனவும், சசிகலா இல்லையென்றால் இன்னும் சில காலங்கள் ஜெ வாழ்ந்திருப்பார் எனவும் கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ ஆறுகுட்டி தெரிவித்துள்ளார். 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி மரணமடைந்ததாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. 

72 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் தனது முதலமைச்சர் பதவியை வலுக்கட்டாயமாக சசிகலா பிடுங்கி விட்டார் எனவும் கூறி முன்னாள் முதலமைச்சர் ஒபிஎஸ் அதிமுகவில் இருந்து தனி அணியாக பிரிந்து சென்றார். 

அப்போது, கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி முதல் ஆளாக ஒபிஎஸ்சிடம் தஞ்சம் அடைந்தார். 
இதைதொடர்ந்து இரு அணிகளின் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், ஆறுக்குட்டி எடப்பாடி அணியில் இணைந்தார். இதையடுத்து தற்போது ஒபிஎஸ் அணியும் இபிஎஸ் அணியும் இணைந்துள்ளது. 

இதனிடயே எடப்பாடி அணிக்கு எதிராக டிடிவி தினகரன் அணியை சேர்ந்த 19 எம்.எல்.ஏக்கள் புதுச்சேரி ரிசார்ட்டில் தங்கியுள்ளனர். 

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ஆறுக்குட்டி எம்.எல்.ஏ, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு சசிகலா குடும்பம்தான் காரணம் எனவும், சசிகலா இல்லையென்றால் இன்னும் சில காலங்கள் ஜெ வாழ்ந்திருப்பார் எனவும்  தெரிவித்தார். 

சசிகலாவால் தான் சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு அவப்பெயர் வந்துள்ளது எனவும் தெரிவித்தார்.