திமுக கூட்டணியில் நீடித்து வரும் காங்கிரஸ் கட்சி சார்பாக துணை முதல்வர் பதவியை வலியுறுத்தி பெற தீர்மானம் நிறைவேற்றியுள்ளது மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

 

தமிழகத்தில் எதிர்வரவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கி விட்டன. கூட்டணி பேச்சுவார்த்தை, கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடங்களை ஒதுக்குவது, வேட்பாளார்கள் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான பணிகளில் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், காங்கிரஸ் சென்னை மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம், அக்கட்சியின் மாவட்ட தலைவர் வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

அப்போது, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு எதிர்வரும் தேர்தலில் அதிக இடம் ஒதுக்குவதுடன், துணை முதலமைச்சர் பதவியும் கேட்டுப்பெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியானது. செயற்குழு கூட்டம் தொடர்பாக வீரபாண்டியன்  வெளியிட்ட அறிக்கையில், “வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக –காங்கிரஸ் கூட்டணியில் மு.க.ஸ்டாலின் முதல்வராக பாடுபடுவது என்று சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்று செயற்குழுவில் குரல் எழுப்பப்பட்டது. இதை மாநிலத் தலைமைக்கு பரிந்துரைசெய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது”என்று தெரிவித்து இருக்கிறார். 

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசரின் தீவிர ஆதரவாளரான வீரபாண்டியன், காங்கிரஸுக்கு துணை முதல்வர் பதவி வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, திமுகவுக்கு வியூகம் வகுக்கும் பிரஷாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனம், கூட்டணி கட்சிகளுக்கான பலம் தொடர்பாக தமிழகத்தில் நடத்திய ஆய்வில், காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் 8 சதவீதமாக இருக்கிறது என்ற தகவலை ரிப்போர்ட்டாக திமுக மேலிடத்துக்கு ஐபேக் நிறுவனம் அனுப்பி வைத்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு அதனடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது. 

அதேவேளை, கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 41 இடங்கள் ஒதுக்கியதும், அதில் பெரும்பாலான இடங்களில் அக்கட்சி தோல்வியுற்று அதன்மூலம் அதிமுகவின் வெற்றி வழிவகுத்து கொடுத்ததை சுட்டிக்காட்டி காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்களை ஒதுக்கக் கூடாது என்று திமுக நிர்வாகிகள் கட்சி மேலிடத்துக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் பல கோஷ்டிகளாக உள்ள காங்கிரஸ் கட்சியில் இரண்டாம் கட்டத்த நிர்வாகிகள் ஆளாளுக்கு ஆட்சியில் பங்கு, 60 சீட்டுகள், துணை முதல்வர் பதவி என கலகத்தை ஆரம்பித்து வருகின்றனர். தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் திமுகவுக்கு எந்தெந்த வகைகளில் குடைச்சல் கொடுக்கப்போகிறதோ என அந்தக்கட்சி தலைவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

திமுகவின் பிராதன கூட்டணி கட்சியாக காங்கிரஸ் உள்ளது. ஆனால், கடந்த உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி தர்மத்தை திமுக கடைபிடிக்கவில்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை, சோனியா காந்தி கூட்டிய கூட்டத்தை தவிர்த்த திமுக என அக்கூட்டணிக்குள் பனிப்போர் நிகழ்ந்து வந்தாலும் தற்போது வரை திமுக கூட்டனியில்தான் காங்கிரஸ் உள்ளது. எனினும், காங்கிரஸ் - திமுக கூட்டணி சட்டமன்ற தேர்தலில் தொடருமா என்ற பேச்சுகள் எழுந்துள்ளன.

இந்த விவகாரம் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல்வர் பதவி கேட்டு எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. அது தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகள் முற்றிலும் தவறு என்றும் மாவட்ட தலைவர் வீரபாண்டியன் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கைக்குள் சூரியன் அடங்குமா..? இல்லை சூரியன் கையை கழுவி விடுமா? என்பது போகப்போகத் தெரியும்..!