Asianet News TamilAsianet News Tamil

ஜெ., மர்ம மரணத்தை விசாரிக்க சி.பி.ஐ வரணும்... ஓ.பி.எஸ், இ.பி.எஸை விசாரிக்கணும்... மத்திய அரசிடம் கேட்கும் ராமதாஸ்!

The central government should order the interrogation investigations into Jayalalithaa death mystery
The central government should order the interrogation investigations into Jayalalithaa's death mystery
Author
First Published Sep 28, 2017, 1:10 PM IST


முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான மர்மம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இந்த விஷயத்தில் அமைதியாக இருக்க வேண்டியவர்கள் புதிது புதிதாக சர்ச்சைகளை எழுப்புவதும்,  மர்மத்தை போக்க வேண்டிய பொறுப்பான இடத்தில் இருப்பவர்கள் அமைதிக் காப்பதும் கண்டிக்கத்தக்கது.

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரை அமைச்சர்கள் யாரும் சந்திக்கவில்லை என்றும், ஜெயலலிதாவின் உடல்நிலை தேறிவிட்டதாக சசிகலா கூறியதைத் தான்  கூறியதாகவும் அமைச்சரவையில் மூன்றாவது இடத்தில் உள்ள திண்டுக்கல் சீனிவாசன் கூறியிருந்தார். அவரது கூற்றை மறுத்த மற்றொரு மூத்த அமைச்சர் செல்லூர் ராஜு, மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வந்த ஜெயலலிதாவை தாம் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் பார்த்ததாக தெரிவித்தார். 

மேலும் பல அமைச்சர்களும் இது தொடர்பாக முரண்பட்ட கருத்துக்களைக் கூறி வரும் நிலையில், மருத்துவமனையில் நடந்தது என்ன? என்பதை அப்போது முதலமைச்சர் பதவியை கவனித்து வந்த ஓ.பன்னீர் செல்வம், இப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தான் தமிழ்நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும். 

ஆனால், அவர்கள் இருவருமே எந்த கருத்தையும் தெரிவிக்காமல்  வாய்மூடி மவுனியாக உள்ளனர். பல்வேறு பொது இடங்களுக்கு சென்றாலும் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் தப்பி ஓடுகின்றனர். பல நேரங்களில் அவர்கள் இருவருமே தலைமறைவாகி விடுகின்றனர்.

இவர்களுக்கு அடுத்தப்படியாக இந்த விஷயத்தில் விளக்கமளிக்கும் நிலையில் இருப்பவர் அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப்ரெட்டி ஆவார். ஆனால், சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் அனைத்துக் கேள்விகளுக்கும் பட்டும் படாமலும் தான் பதிலளித்தார். ஜெயலலிதாவை தமிழக அமைச்சர்கள் பார்த்தார்களா? என்ற கேள்விக்கு பதிலளிக்க அவர் மறுத்து விட்டார். இதன்மூலம் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரை அமைச்சர்கள் பார்த்தார்களா? மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது? என்பது குறித்த ஐயங்கள் விலகுவதற்கு பதிலாக அதிகரித்திருக்கின்றன. மர்மத்தைப் போக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கடந்த ஆண்டு  செப்டம்பர் 22-&ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்தே ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த வதந்திகளும், சர்ச்சைகளும் கொடி கட்டி பறந்தன. அவரது மரணத்திற்குப் பிறகும் சர்ச்சைகள் அடங்கவில்லை. சர்ச்சையைப் போக்க நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக அனைத்து உண்மைகளையும் மறைப்பதில் தான் ஆட்சியாளர்கள்  துடித்துக் கொண்டிருக்கின்றனர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவி வகித்த போது, ஜெயலலிதா மரணம் குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர் கண்டுகொள்ளவில்லை. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஆணையிட வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட போது, அதற்கு தேவையில்லை என்று அவரது அரசு பதில் மனு தாக்கல் செய்தது. இதன் மூலம் ஜெயலலிதா மரண மர்மத்தை குழிதோண்டி புதைக்க முயன்றது. 

ஆனால், முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் பற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிட்டால் தான் அதிமுக எடப்பாடி அணியில் இணைய முடியும் என்று ஓ.பன்னீர்செல்வம் நிபந்தனை விதித்தார். அப்படிப்பட்டவர் இப்போது அமைதியாக இருப்பதன் நோக்கம் என்ன? மருத்துவமனையில் ஜெயலலிதாவை நேரில் பார்த்ததாகவும், பார்க்கவில்லை என்றும் அமைச்சர்கள் கூறிவரும் நிலையில், அவற்றில் எது உண்மை? என்பதை 24 மணி நேரமும் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் தான் விளக்கமளிக்க வேண்டும். ஜெயலலிதா மரண மர்மம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என வலியுறுத்தி வந்த பன்னீர்செல்வம், இப்போதும் அதே நிலைப்பாட்டில் தான் இருக்கிறாரா? அல்லது அதிகாரமில்லாத ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான விசாரணை ஆணையத்தை ஏற்றுக்கொள்கிறாரா? என்பதை விளக்க வேண்டும்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியோ இந்த விவகாரத்திற்கும் தமக்கு சம்பந்தமே இல்லாதது போன்று நடந்து கொள்கிறார். விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு 40 நாட்களுக்குப் பிறகே நீதிபதியின் பெயரை அறிவிக்கிறார். இந்த விசாரணை ஆணையத்தால் தமிழகத்திற்கு அப்பால் தில்லிக்கோ, லண்டன் மற்றும் சிங்கப்பூருக்கோ சென்று விசாரிக்க முடியுமா? என்பது தெரியவில்லை. ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை வெளிக்கொண்டு வரும் அக்கறை ஆட்சியாளர்களுக்கு இல்லை. ஏதோ ஒரு காரணத்தைக் கூறி விசாரணையைத் தாமதப்படுத்தவும்,  குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு இந்த விவகாரத்தை குழிதோண்டி புதைக்கவும் தான் அரசு துடிக்கிறது என்பதை அதன் செயல்களிலிருந்து உணர முடிகிறது.

ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை வெளிக்கொண்டு வருவதில் தமிழக ஆட்சியாளர்களுக்கு அக்கறை இல்லாத நிலையில், அவர்கள் அமைத்த விசாரணை ஆணையத்தால் எந்த பயனுமில்லை.  ஏற்கனவே பல மாதங்களாகவே பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருவது போன்று ஜெயலலிதா மரண மர்மம் குறித்து நடுவண் புலனாய்வு பிரிவு விசாரணைக்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும்; முதலமைச்சர், துணை முதலமைச்சரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

Follow Us:
Download App:
  • android
  • ios