இந்தியா பற்றி எரிந்து கொண்டிருப்பதற்கு முக்கிய காரணம் அதிமுக மற்றும் பாமகவுமே காரணம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 

கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட கிறிஸ்தவர்களுக்கு, பெரியார் நகரில் நலத்திட்ட உதவிகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின்;- முஸ்லிம்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் துரோகம் விளைவிக்கும் வகையிலான குடியுரிமை திருத்தச் சட்டத்தை மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர்கள் 11 பேரும், பாமகவின் உறுப்பினர் ஒருவரும் என மொத்தம் 12 பேரும் ஆதரித்துள்ளனர். அவர்கள் எதிர்த்து ஓட்டு போட்டிருந்தால் இந்தச் சட்டத்தை அன்றேயே தினமே நிறைவேற்றாமல் முறியடித்திருக்க முடியும். அதனால் தான், இன்றைக்கு இந்தியாவே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. கலவரங்கள் நடந்து கொண்டிருக்கின்றன என்றார். 

எப்பொழுதும் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் சிறுபான்மையினருக்காக உழைக்கும் கட்சி திமுக. இலங்கை தமிழர்களுக்கும், சிறுபான்மையினருக்கும் திமுக என்றைக்கும் பாதுகாப்பாய் துணை நிற்கும். திமுகவின் பேரணிக்கு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட நினைப்பவர்கள் இப்பேரணியில் கலந்துகொள்ளலாம். பேரணிக்கு பிறகும் மத்திய அரசு இறங்கி வரவில்லை எனில் தமிழகமே சந்திக்காத வகையில் பெரிய போராட்டம் நடைபெறும் என எச்சரித்துள்ளார். 

மேலும், முதல்வர் பழனிசாமி நேற்று டெல்லியில் அளித்த பேட்டியில் இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமையை நாங்கள் வலியுறுத்துவோம் என்று சொல்கிறார். இரட்டைக் குடியுரிமை என்றால், இரட்டைக் குடியுரிமை என்பது இலங்கைத் தமிழர்களுக்கு இலங்கையில் ஒரு குடியுரிமை, இந்தியாவில் ஒரு குடியுரிமை என்பதுதான். இதைத்தான் இரட்டைக் குடியுரிமை என்று சொல்கிறோம். அதை வலியுறுத்துவோம் என்று சொல்கிறார். எப்படி வலியுறுத்த முடியும் என்று கேட்கிறேன். இப்போது நிறைவேற்றியிருக்கும் சட்டத்தில் அது இடம்பெற்று இருக்கிறதா? இந்த சராசரி அறிவு கூட ஒரு முதல்வருக்கு இல்லையே ஏதோ புத்திசாலி போல, எல்லாம் தெரிந்த அறிவாளி போல் இப்படிச் சொல்கிறார் என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

எதற்கெடுத்தாலும், திமுக பொய் சொல்லி தான் ஓட்டு வாங்கியது என கூறுகிறார். ஆனால் யார் பொய் சொல்கிறார்கள் என விரைவில் தெரியவரும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.